நெட்டன்யாகு அமெரிக்காவில் கைது செய்யப்படமாட்டார்: டிரம்ப்

நெட்டன்யாகு அமெரிக்காவில் கைது செய்யப்படமாட்டார்: டிரம்ப்

1 mins read
4b8479fb-90ea-47f6-9265-b7ee7586e232
2025ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் ஃபுளோரிடா நகரில் சந்தித்துப் பேசினர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு எந்தச் சூழ்நிலையிலும் அமெரிக்காவில் கைது செய்யப்படமாட்டார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

காஸா போர் தொடர்பான போர்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தி ஹேக்கில் உள்ள அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் 2024ஆம் ஆண்டில் திரு நெட்டன்யாகுவுக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பித்தது.

காஸா விவகாரம் தொடர்பாக அனைத்துலக நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட கைது ஆணையையும் இஸ்ரேல் ஏற்க மறுத்துள்ளது.

நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி, நெட்டன்யாகு நியூயார்க் வந்தடையும் பட்சத்தில் சட்டப்படி அவரைக் கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நகரச் சட்டத்துறை பரிசீலித்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

“அனைத்துலக நீதிமன்றத்திடம் திரு நெட்டன்யாகுவை ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது கருத்து. அவர் ஒரு போர்க் குற்றவாளி. அவர்மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது,” என்று நியூயார்க் டைம்ஸ் நடத்திய வலையொளியில் திரு மம்தானி கூறினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், திரு நெட்டன்யாகு அமெரிக்க மண்ணில் இருக்கும்போது கைது செய்யப்படமாட்டார் என அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஇஸ்‌ரேல்பெஞ்சமின் நெட்டன்யாகுடோனல்ட் டிரம்ப்