நெதர்லாந்து: உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆளில்லா வானூர்தி, ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரேனுக்கு உதவும் வகையில் நெதர்லாந்து நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளில்லா வானூர்திகளைத் தீவிரமாக மேம்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், நெதர்லாந்தின் இன்டெலிக் நிறுவனம், அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சிடமிருந்து 30 மில்லியன் யூரோ (42.99 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்று, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வழிகாட்டல் கொண்ட ஆளில்லா வானூர்தி எதிர்ப்பு அமைப்புகளைச் சோதித்துள்ளது.
நெதர்லாந்தின் பழைய விமானத் தளத்தில் நடத்தப்பட்ட இச்சோதனையில், ரேடார், கேமராக்கள் மூலம் எதிரி இலக்குகள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு, ஏஐ தொழில்நுட்பம் கொண்ட அதிவேக ஆளில்லா வானூர்திகள் மூலம் அவை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டன.
நெதர்லாந்து அரசு 2022ஆம் ஆண்டு முதல் உக்ரேனின் ஆளில்லா வானூர்தித் திட்டத்திற்கு ஏறக்குறைய 1.4 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. அத்துடன், இதுவரை ஒரு மில்லியன் ஆளில்லா வானூர்திகளையும் அது வழங்கியுள்ளது.
ஐரோப்பாவில் 700க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்தித் தயாரிப்பாளர்கள் செயல்பட்டு வருவதால், வெவ்வேறு நிறுவனங்களின் ஆளில்லா வானூர்திகளை ஒரே அமைப்பின்கீழ் இணைக்க இன்டெலிக் நிறுவனத்தின் ‘நெக்சஸ்’ மென்பொருள் பெரிதும் பயன்படுகிறது.
ரஷ்யா அதிவேக ஜெட் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தித் தாக்கி வரும் தற்போதைய சூழலில், ஆகாயத் தற்காப்பில் மனிதத் தொடர்பைக் குறைத்து தானியக்க ஏஐ அமைப்புகளைப் பயன்படுத்துவது, முடிவெடுக்கும் நேரத்தை வெகுவாகச் சுருக்கி, போர்க்களத்தில் பல உயிர்களைப் பாதுகாக்க உதவுகிறது.
