பத்து பகாட்டில் சிறுமியைத் தாக்கியதால் தெருநாய்களுக்கு வலைவீச்சு

பத்து பகாட்டில் சிறுமியைத் தாக்கியதால் தெருநாய்களுக்கு வலைவீச்சு

2 mins read
abee5a08-86e3-414d-b346-8da8170665e7
பத்து பகாட் நகராட்சி மன்ற ஊழியர்கள் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். - படம்: எம்பிபிபி

பத்து பகாட்: பெசராயில் ஒரு சிறுமியை தெருநாய்கள் தாக்கியதால் அப்பகுதியில் கிராமங்கள், பிற இடங்களில் உள்ள தெருநாய்களைப் பிடிக்கும் வேட்டையை நகராட்சி மன்றம் தீவிரப்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டில் 263 நடவடிக்கைகளில் ஏறக்குறைய 1,557 தெருநாய்களைப் பிடித்த பத்து பகாட் பகாட் நகராட்சி மன்றம், இவ்வாண்டில் 205 நடவடிக்கைகளில் 736 தெருநாய்களை வலையில் சிக்க வைத்துள்ளது.

அதிக அபாயம் உள்ள பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளையும் மன்றம் எடுத்து வருகிறது.

செப்டம்பர் 5ஆம் தேதி கம்போங் தம்பாக், பெசராயில் உள்ள தனது பாட்டி வீட்டின் வெளியே காலை 7 மணியளவில் இரண்டு வயது சிறுமி நூர் ஹைய்ரா வத்திகா முஹமட் ஹமிஸியை ஐந்து தெருநாய்கள் கடித்துக் குதறின.

அவரது உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் செயற்கையாக கோமா நிலையில் வைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தாக்குதல் நடந்த இடத்தில் நகராட்சி தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள அதே வேளையில் அருகில் உள்ள கிராமங்களுக்கும் அடையாளம் காணப்பட்ட பிற பகுதிகளுக்கும் சுற்றுக்காவல், நாய் பிடிக்கும் முயற்சிகளை விரிவுபடுத்தியுள்ளது.

இவ்வாண்டு ஆகஸ்ட் 31 நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 205 நடவடிக்கைகளில் 736 தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக பத்து பகாட் நகராட்சி மன்றத் தலைவர் முகமது நசிட் ஜசிமான் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முழுவதும் 263 நடவடிக்கைகளில் 1,557 நாய்கள் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெருநாய் தொல்லைகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் வழக்கமான சுற்றுக் காவல் பணிகள் தொடரும் என்றும் பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு அடையாளம் காணப்பட்ட முக்கியப் பகுதிகளில் தாமான் புத்தெரா இண்டா, பத்து பகாட் நகர மையம், தாமான் ஸ்ரீ காடிங், தாமான் யுனிவர்சிட்டி மற்றும் தாமான் புக்கிட் பெர்டானா ஆகியவை அடங்கும்.

இந்த ஆண்டில், பாரிட் ராஜா, தாமான் புத்ரா, இண்டா, தாமான் எவர்கிரீன் ஹைட்ஸ் உள்ளிட்ட இடங்களில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

பிடிக்கப்பட்ட நாய்கள், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சின் ‘பிடித்தல்-மீட்டல்-மறுவாழ்வு, மறுவீடு அளித்தல்-அகற்றுதல்’ என்ற அணுகுமுறையின்கீழ் நிலையான நடைமுறைகளின்படி நிர்வகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
தெருநாய்குழந்தைமலேசியா