சென்னை: புதிய வசதிகளுடன் சென்னை அண்ணா நகரில் ஆதார் சேவை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
அந்நிலையத்தில் 1,000 பேருக்கு சேவைகள் வழங்கமுடியும். அந்நிலையம், அண்ணா நகர் கிழக்கில், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவன கட்டடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
புதிய ஆதார் சேவை நிலையத்தின் அதிகாரபூர்வ திறப்புவிழா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) நடந்தது. அந்நிகழ்வில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமை இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பெங்களூரில் இருந்தும் அதிகாரிகள் வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக என்று இந்து தமிழ்திசை ஊடகச் செய்தி குறிப்பிட்டது.
நிலையத்தில் அமைந்துள்ள 15 முகப்புகளில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சேவை வழங்குகின்றனர். இணையத்தில் 500 நபர்கள் அன்றாடம் முன்பதிவு செய்யக்கூடிய வசதியுடன் நேரடியாக 500 பேர் சேவை நிலையத்தில் வந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

