ஏடன் (துபாய்): ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதாகக் கடல்சார் கண்காணிப்பாளர்களுக்கு புதிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதற்கான அச்சம் அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்ற கப்பல்மீது ஏவுகணைத் தாக்கியதாகத் தகவல் கிடைத்துள்ளது என்று பிரிட்டிஷ் கடற்படையுடன் இணைக்கப்பட்ட ‘யுகேஎம்டிஒ’ அமைப்பு தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட சேதம் அல்லது ஊழியர்கள் நிலை குறித்து தெரியவில்லை என்று அந்த அமைப்பு கூறியது.
மேல் விவரங்களை வெளியிடாமல், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரானின் தெற்குக் கடற்கரையில் ஈரானிய வர்த்தகக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மூவர் காயமடைந்ததாகவும் ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே ஈரானிய ஆதரவு கிளர்ச்சிக் குழுக்கள் இயங்கும் ஈராக்கிலிருந்து ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது கிழக்கு-மேற்கு எண்ணெய்க் குழாயைத் தற்காலிகமாக மூடியதாக சவூதி அரேபியா அறிவித்தது.
அதற்கு மறுநாளே நீரிணையில் நடந்த தாக்குதல் குறித்து யுகேஎம்டிஒ-வின் அறிக்கை வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்த ஒரு வாரத்திற்குப் பிறகு மத்திய கிழக்குப் போர் விரிவடைந்து நடக்கும் இத்தகைய தாக்குதல்கள் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரேபிய தீபகற்பத்தின் குறுக்கே செல்லும் 1,200 கி.மீ நீளமுள்ள கிழக்கு-மேற்கு எண்ணெய்க் குழாய் அமைப்பு, போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை பெருமளவில் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களாக மத்திய கிழக்கு எண்ணெய்யை உலகளாவிய விநியோகத்திற்குக் கொண்டு செல்லும் முக்கியப் பாதையாக அது இருந்து வருகிறது.
இது, தினமும் 40 லட்சம் முதல் 50 லட்சம் பீப்பாய்களைக் கொண்டு செல்கிறது. இது உலகளாவிய விநியோகத்தில் நான்கு முதல் ஐந்து விழுக்காடாகும். பிற வளைகுடா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதியாளர்களை முடக்கிய பாதிப்புகளிலிருந்து சவூதி அரேபியாவைப் பெருமளவில் இது பாதுகாத்துள்ளது.
எண்ணெய்க் குழாய்மீதான இத்தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை.
மதினாவிற்குத் தெற்கே உள்ள எண்ணெய் குழாய் பகுதியிலிருந்து கருப்பு புகை பரவும் செயற்கைக்கோள் படங்களைச் சான்றாகக் காண முடிகிறது.
இந்தத் தாக்குதலில் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் சவூதி வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது குறித்த விவரங்களை அது வெளியிடவில்லை.
இந்நிலையில் தனது சொத்துகளில் ஒன்றில் நடைபெறும் கோல்ஃப் போட்டியில் கலந்துகொள்வதற்காக அயர்லாந்திற்குச் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இதற்கு ஈரானே பொறுப்பாக இருக்கும் எனத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் விரிவடையும் போரால் ஹூதிகளுக்கு எதிராகப் போராடச் சவூதி அரேபியாவிற்கு உதவ வேண்டுமா என்ற சங்கடமான சூழலையை வாஷிங்டன் இப்போது எதிர்கொள்கிறது.
சவுதி அரேபியாவின் நடைமுறை ஆட்சியாளரான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், வியாழக்கிழமையன்று டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஹூதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் ராணுவ உதவியைக் கேட்டதாக மூன்று நம்பகமான வட்டாரங்கள் ராய்ட்டர்சிடம் தெரிவித்தன.
வாஷிங்டன் இப்போதைக்கு நேரடியாகத் தலையிடாது, ஆனால் உளவுத்துறை தகவல்களை வழங்கி உதவும் என்று இளவரசரிடம் கூறப்பட்டதாக அவ்வட்டாரங்கள் கூறுகின்றன.

