ஜார்ஜ்டவுன்: மலேசிய மாநிலமான பினாங்கில் உள்ள அரசாங்க உதவிபெறும் 22 தமிழ்ப் பள்ளிகளுக்கு S$336,000 (மலேசிய ரிங்கிட் 1.156 மில்லியன்) செலவில் புதிய நாற்காலிகள், மேசை போன்ற பல உபகரணங்கள் வழங்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி கற்கும் சூழலை மேம்படுத்தும் இலக்குடன் செயல்படும் மலேசிய இந்தியர்கள் உருமாற்றக் குழு (மித்ரா) இத்திட்டத்தை முன்னெடுத்தது.
மலேசிய மனிதவள அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் வோங் கா வோ திங்கட்கிழமை (ஜூன் 15) அறிவித்தார்.
பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து தேசியத் தமிழ்ப் பள்ளிகளும் இத்திட்டத்தில் பலனடையும் எனவும் அவர் கூறினார்.
அடுத்த ஓரிரு மாதங்களில் அந்த உபகரணங்களைப் பெற்று, அவற்றை விநியோகிக்கும் பணிகள் நடைபெறும் என்பதையும் அவர் குறிப்பிட்டார். அதன்வழி மாணவர்களுடன் ஆசிரியர்களும் சிறந்த கல்வி கற்கும், கற்பிக்கும் சூழலைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பினாங்கு மாநிலத்தின் ஆயர் ஈத்தாமில் 70 ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் ராஜாஜி தமிழ்ப் பள்ளிக்கான புதிய கட்டுமான ஒப்புதல் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கல்வி அமைச்சர் இவ்விவரங்களைப் பகிர்ந்தார்.
ராஜாஜி தமிழ்ப் பள்ளியில் ஏறத்தாழ 100 மாணவர்கள் பயில்கின்றனர். அப்பள்ளியின் புதிய 0.93 ஹெக்டர் பரப்பளவிலான கட்டடம் தற்போதைய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ளது.
புதிய பள்ளிக்கான செலவு $2.5 மில்லியன் (மலேசிய ரிங்கிட் 8 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது. முழுச் செலவையும் சொத்து நிறுவனமான ஐடீல் கன்ஸ்ட்ரக்ஷன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
திட்டப்படி கட்டுமானப் பணிகள் இடம்பெற்றால், 18 மாதங்களில் பள்ளி கட்டிமுடிக்கப்படும். புதிய இடத்தில் 2029ஆம் ஆண்டுக்குள் பள்ளி செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

