பினாங்கு: பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிலத்தில் இந்துக்களுக்கான புதிய தகனச்சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பினாங்கின் ஜாலான் தெலாகா ஆயர் பகுதியில் இந்தப் புதிய தகனச்சாலை அமைப்பதற்காகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கியிருப்பதாகப் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டப் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) முதல் குத்தகைகளுக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு புதிய கட்டடங்களுடன் நவீன எரியூட்டிகள் அடங்கியதாக இந்தத் தகனச்சாலை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பினாங்கு மாநில இந்துக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருப்பதாகப் பிரதமர் அன்வாரிடம் தெரிவித்தபோது, உடனடியாக அதற்கான நிதியை வழங்கியதாகவும் விரைந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாகவும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடைய வேண்டும் என்பதால் பொது வெளியில் குத்தகையாளர்களுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டிருப்பதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர், முன்னாள் நிதி அமைச்சரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், செனட்டர் லிங்கேஸ்வரன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஆகியோர் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.

