தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செயற்கை நுண்ணறிவைப் பெருக்க புதிய உடன்பாடுகள்: டிரம்ப் அறிவிப்பு

2 mins read
393d93d2-db6d-4634-aa19-a5188f559ddb
பென்சில்வேனியாவில் நடைபெற்ற முதல் எரிசக்தி, புத்தாக்க மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (இடதிலிருந்து இரண்டாவது) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பெருக்க $92 பில்லியன் முதலீட்டை அறிவித்தார். - படம்: புளூம்பர்க்

பிட்ஸ்பர்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தின் வளர்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை விநியோகம் செய்ய $92 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, உள்கட்டமைப்பு உடன்பாடுகளை அறிவித்துள்ளார்.

கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல் பென்சில்வேனியா எரிசக்தி, புத்தாக்க மாநாட்டில் திரு டிரம்ப் அதை அறிவித்தார். அதில் பேசிய திரு டிரம்ப், அனைத்துலக செயற்கை நுண்ணறிவுப் பந்தயத்தில் சீனாவை முந்தவேண்டும் என்றார் அவர்.

தொழில்நுட்ப உலகம் செயற்கை நுண்ணறிவை முழுமையாக அரவணைத்தாலும் பெரிய அளவிலான அதன் மின்சாரத் தேவைகளைத் தற்போதைய உள்கட்டமைப்பால் பூர்த்திசெய்ய முடியாது. குறிப்பாக அமெரிக்காவால் பூர்த்திசெய்ய முடியாது என்று அஞ்சப்படுகிறது.

2028ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு ஐந்து கிகாவாட்ஸ் வரையிலான மின்சாரம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஏறக்குறைய ஐந்து மில்லியன் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு.

திரு டிரம்ப் அறிவித்த நிதி புதிய தரவு நிலையங்கள், மின்சார உற்பத்தி, மின்சார உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி, பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.

பென்சில்வேனியாவிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலும் செயற்கை நுண்ணறிவு தரவு நிலையங்களை அமைக்க கூகல் நிறுவனம் $25 பில்லியன் டாலர் நிதியை வழங்க உறுதியளித்தது.

“செயற்கை நுண்ணறிவில் அமெரிக்கா முதலீடு செய்யவேண்டும் என்ற திரு டிரம்ப்பின் தெளிவான அவசரமான முடிவை ஆதரிக்கிறோம். அப்போதுதான் அமெரிக்கா செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும்,” என்றார் கூகல் நிறுவனத்தின் தலைவரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான திருவாட்டி ரூத் போரட்.

பென்சில்வேனியாவில் உள்ள இரண்டு நீர்மின் நிலையங்களை நவீனமயமாக்க புரூக்ஃபீல்ட் அசெட் நிர்வாக நிறுவனத்துடனும் கூகல் நிறுவனம் பங்காளித்துவத்தை அறிவித்தது.

முதலீட்டு குழுமமான பிளாக்ஸ்டோன் புதிய தரவு நிலையங்களையும் எரிசக்தி உள்கட்டமைப்பையும் அமைக்க $25 பில்லியனுக்கும் அதிகமான நிதியை வழங்க உறுதிகூறியது.

“நாம் சீனாவைவிட மிகவும் முன்னிலையில் இருக்கிறோம். ஆலைகளும் தொடங்குகின்றன. கட்டுமானப் பணிகளும் தொடங்குகின்றன,” என்றார் திரு டிரம்ப்.

குறிப்புச் சொற்கள்