இலங்கையின் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை விரிவுபடுத்தி, விமானச் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிவில் விமானச் சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 11) தீர்வையற்ற (duty-free) கடையைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
"தற்போது யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே வாரத்தில் நான்கு விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன. இனி ஒரு வாரத்தில், ஏழு விமானச் சேவைகளை வழங்குமாறு அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.
"அதேபோல், இரத்மலானை விமான நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கும் இடையில், உள்ளூர் விமானச் சேவையை விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
"இந்த விமான நிலையத்தினை மேலும் விரிவுபடுத்தி, இங்கே பயணம் செய்யும் பயணிகளுக்கு மேலும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிகளை எடுத்துள்ளோம்," என்றார் திரு சந்திரசிறி.
வர்த்தக ரீதியில் மேலும் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
"இன்று முதலாவது தீர்வையற்ற கடை திறக்கப்பட்டுள்ளது. அதேபோல மேலும் பல கடைகள் திறக்கப்படுவதைப் பயணிகள் எதிர்பார்க்கலாம்.
"தீர்வையற்ற கடைகளுக்காக ஒரு தனி கட்டடத் தொகுதியை அமைக்கவுள்ளோம். அதேபோல் விமானத்திற்குள் நுழையும், வெளியேறும் பாதைகள் விரிவுபடுத்தப்பட்டு, பயணிகள் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ஏதுவாக ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளோம்," என்றார் அவர்.

