தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணெய்க் கசிவால் ஏற்படும் மாசைக் குறைக்கப் புதிய முயற்சி

2 mins read
4ddf8a09-64da-472f-81d5-bd52ddb725bb
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மோசமான எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இதனால் சிங்கப்பூரின் தெற்குக் கடல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்க் கடற்கரைகளில் எண்ணெய்க் கசிவு ஏதேனும் ஏற்பட்டால் அந்த மாசைக் கட்டுப்படுத்த ரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கடல் நீரில் கசிந்த எண்ணெய் மீது ரசாயனம் தெளிக்கப்படும். அது எண்ணெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கும்.

இந்நிலையில், சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கடல் நீரில் கசிந்த எண்ணெய்யை வெளியேற்ற இயற்கையான முறையில் புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளனர். நுண்ணுயிர்களைப் பயன்படுத்துவதுதான் அது.

“இயற்கையான நுண்ணுயிர்கள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாதவை,” என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீபன் பிரையன் பாண்டிங் தெரிவித்துள்ளார். அவர் இந்த ஆய்வை வழிநடத்துகிறார்.

ஆய்வில், கடலில் உள்ள நுண்ணுயிர்கள் எவ்வளவு முக்கியமானவை, அவற்றால் கடல் பாதுகாப்புக்கு எவ்வளவு உதவி கிடைக்கிறது என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மோசமான எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. 400 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் கடல்நீரில் கலந்தது. இதனால் சிங்கப்பூரின் தெற்குக் கடல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. இது சிங்கப்பூரில் நிகழ்ந்த ஆக மோசமான எண்ணெய்க் கசிவு.

நுண்ணுயிர் பன்முகத்தன்மை குறித்து ஆராயும் பேராசிரியர் பாண்டிங், எண்ணெய்க் கசிவு ஏற்பட்டபோது அது கடலில் உள்ள நுண்ணுயிர்ச் சூழலை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கவனித்தார்.

செயின்ட் ஜான்ஸ் தீவில் உள்ள பென்டெரா பே பகுதியில் இருந்து மணல் மாதிரிகளை எடுத்தனர். அதில் எந்த ஒரு சுத்திகரிப்பு நடவடிக்கையும் செய்யப்படவில்லை.

பென்டெரா பே பகுதியில் எண்ணெய்க் கசிவால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மணலும் அதேபோல் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்படாத மணலும் தனித்தனியாக எடுக்கப்பட்டன.

அந்த மணலை ஆய்வாளர்கள் ஆராய்தபோது சில முக்கியமான நுண்ணுயிர்கள் இருந்ததைக் கண்டனர்.

எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மணலில் கூடுதலான நுண்ணுயிர்கள் இருந்தன. அதில் மேகான்டிமோனாஸ் டியாஸ்சோடிரோபிக்கா (Macondimonas diazotrophica) என்னும் நுண்ணுயிரும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நுண்ணுயிர்கள் எண்ணெய்ப் படிவை வேகமாக உண்ணக்கூடியவை.

சிங்கப்பூர்க் கடற்கரைகளில் இவ்வகை நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர் இவை அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் கண்டறியப்பட்டுள்ளன.

41 நுண்ணுயிர்களைக் கொண்டு எண்ணெய்க் கசிவுகளைச் சமாளிக்கலாம் என்றார் பேராசிரியர் பாண்டிங். இவை சுத்தமான மணல்களில் இருக்காது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

எண்ணெய்க் கசிவுக்குப் பிறகு ஆறு மாதம் கழித்தும் மணல் சோதிக்கப்பட்டது. அதில் எண்ணெய்யை உண்ணும் நுண்ணுயிர்கள் இருந்தன.

இயற்கையாகவே எண்ணெய்க் கசிவுப் பாதிப்புகளைச் சமாளிக்கமுடியும் என்பது மகிழ்ச்சி தருவதாகப் பேராசிரியர் பாண்டிங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்