வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளைப் பயனர்கள் விரும்பிய நேரத்தில் அனுப்பும் புதிய வசதி

வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளைப் பயனர்கள் விரும்பிய நேரத்தில் அனுப்பும் புதிய வசதி

படம்: வாட்ஸ்அப்

26 Nov 2026 - 4:56 pm

1 mins read

இருவருக்கு இடையிலான உரையாடல்களிலும் குழு உரையாடல்களிலும் குறுஞ்செய்திகளைப் பயனர்கள் விரும்பிய நேரத்தில் அனுப்ப உதவும் ‘நேரம் குறிக்கப்பட்ட குறுஞ்செய்திகள்’ எனும் புதிய வசதி குறித்து வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

புதிய நாள் தொடங்குமுன் வாழ்த்துச் செய்தி அனுப்புதல், நள்ளிரவில் எழுதிய செய்தியைக் காலையில் அனுப்புதல் எனச் சரியான தருணத்தில் செய்திகளை உரியவரிடம் சேர்ப்பதை இவ்வசதி எளிதாக்குகிறது.

இதனைப் பயன்படுத்த, அனுப்பும் பொத்தானை (SEND button) அழுத்திப் பிடித்து, 10 நிமிடங்கள் முதல் 14 நாள்கள் வரையிலான தேதி, நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஓர் உரையாடலில் எழுத்து, ஒரு படம் அல்லது ஒரு காணொளி என 30 திட்டமிட்ட குறுஞ்செய்திகள் வரை அமைக்க முடியும்.

செய்திகள் அனுப்பப்படுவதற்கு முன்பாகவே அவற்றைப் பார்வையிட்டு, மனம் மாறினால் நீக்கிவிடலாம். வாசகத்தையோ நேரத்தையோ மாற்ற விரும்பினால், பெறுநருக்குத் தெரியாமல் பழைய செய்தியை நீக்கிவிட்டுப் புதியதை உருவாக்கலாம்.

அனுப்புநரின் கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தாலும் மின்கலன் தீர்ந்தாலும் குறித்த நேரத்தில் செய்தி அனுப்பப்படும். பெறுநர் இணையத் தொடர்பில் இல்லையெனில், மற்ற வாட்ஸ்அப் செய்திகளைப் போலவே அவர் மீண்டும் இணையத்தில் இணையும்போது அவரது திரையில் செய்தி தோன்றும்.

முழு மறையாக்கப் பாதுகாப்புடன் உள்ள இச்செய்திகள் வழக்கமான வாட்ஸ்அப் செய்திகள் போலவே காட்சியளிக்கும். எனவே, முன்கூட்டியே நேரம் குறிக்கப்பட்ட செய்தி என்பதைப் பெறுநரால் அறிய முடியாது. இவ்வசதி வரும் வாரங்களில் உலக அளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்