பாரிஸ்: ஆளில்லா வானூர்திகள் போன்ற மலிவு விலை ஆயுதத் தாக்குதல்களை எதிர்கொள்ள, ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான ‘எம்பிடிஏ’ புதிய இடைமறிப்பு ஏவுகணையை அறிமுகப்படுத்துகிறது.
இங்கிலாந்தில் திங்கட்கிழமை (ஜூலை 20) நடைபெறும் ‘ஃபார்ன்பரோ’ ஆகாயக் காட்சியில் அந்த இடைமறிப்பு ஏவுகணை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய ராணுவங்கள், நேட்டோ படைகளுக்கு, குறைந்த விலை ஆயுதத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு புதிய தற்காப்பாக அது அமையும்.
“இன்று ஐரோப்பாவில், ஒரே நேரத்தில் பெருமளவில் வரும் தாக்குதல்களைச் சமாளிக்கும் திறன் கொண்ட சொந்தக் கட்டமைப்பு எதுவுமில்லை,” என்று ‘எம்பிடிஏ’ நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“அப்படி என்றால், இந்த மிரட்டலை நாம் எதிர்கொள்ள வேண்டுமென்றால், அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது பிற நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பா-சாரா கட்டமைப்புகளையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.
சிறிய ஆளில்லா வானூர்திகளை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த முதல் இடைமறிப்பு ஏவுகணையைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் இரண்டாவது ஏவுகணை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதிகத் தொலைவில் பாயும் திறன் கொண்ட அந்த இரண்டாவது ஏவுகணை, ஆளில்லா வானூர்திகள் மட்டுமன்றி உந்துகணைகள், மிதக்கும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை அனைத்து வானிலைகளிலும் எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்தத் திட்டத்தைத் தற்போது தனது பிரிட்டிஷ் குழுக்கள் வழிநடத்தி வருவதாக ‘எம்பிடிஏ’ கூறியது. அதே வேளையில், அதன் அடுத்தகட்ட மேம்பாடுகளை ஃபிரெஞ்சு குழுக்கள் வழிநடத்த சாத்தியம் உள்ளதாகவும் அது தெரிவித்தது.

