கூலாய்: மலேசியாவில் ஜோகூர் பாருவுக்கும் பாசிர் குடாங், கூலாய் ஆகிய நகரங்களுக்கும் இடையில் புதிய பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கேடிஎம் ஷட்டல் சிலாட்டான் எனும் இந்த ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தொடங்கப்பட்டது. முன்னதாக சரக்கு ரயில்கள் மட்டுமே அந்தப் பாதைகளில் சென்றன.
சினாய் விமான நிலையம் உள்ளிட்ட சில முக்கியமான இடங்கள் கூலாய் வட்டாரத்தில் அமைந்துள்ளன.
சிங்கப்பூரில் வேலை செய்வோர் உட்பட கூலாய், பாசிர் குடாங் நகரங்களில் வசிக்கும் இரண்டு மில்லியன் மக்கள் புதிய ரயில் சேவையால் பலனடைவர் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறினார். புதிய ரயில் சேவையின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
புதிய சேவையின் மூலம் கூலாய், பாசிர் குடாங்வாசிகள் அரை மணிநேரத்தில் ஜேபி சென்ட்ரலுக்குச் செல்லலாம். காரில் அப்பயணத்தை மேற்கொள்ள ஒரு மணிநேரம்கூட ஆகலாம்.
சிங்கப்பூரில் வேலை செய்வோர், ஜேபி சென்ட்ரலிலிருந்து இணைப்பு ரயில் அல்லது பேருந்தில் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.
“ஜோகூர் வேகமாக வளர்ந்துவரும் ஒரு மாநிலமாகும். அதனால், நகர்ப்பகுதிகளைச் சிறு நகரங்களுடனும் தொழில்துறை வட்டாரங்களுடனும் இணைக்கும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது,” என்றார் திரு லோக்.

