வழக்கு விசாரணையை விரைவாக்க அதிக நீதிபதிகள்: முன்னாள் தலைமை நீதிபதி

வழக்கு விசாரணையை விரைவாக்க அதிக நீதிபதிகள்: முன்னாள் தலைமை நீதிபதி

2 mins read
32b025b9-cc54-426a-a8d7-620e8fccc4da
மலேசியாவின் முன்னாள் தலைமை நீதிபதி சாக்கி அஸ்மி (இடது) கடந்த ஆண்டு ஒரு சிறப்பு உரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். - படம்: த நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளை விரைவில் குறைக்கவும் முடித்துவைக்கவும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மலேசியாவின் முன்னாள் தலைமை நீதிபதி சாக்கி அஸ்மி கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், நீதிபதிகளுக்குச் சிறப்புப் பயிற்சிகளும் தொடர்ந்து வழங்கப்படுவது அவசியம் என்று ‘விஸ்டம் மலேசியா’ மாநாட்டில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய தலைமை நீதிபதி வான் ஃபாரிட் வான் சாலே எடுத்துவரும் பல நடவடிக்கைகள் தாம் அப்பதவியில் இருந்தபோது அறிமுகப்படுத்தியவற்றைப்போல அமைந்துள்ளன என்றார் அவர்.

“நான் முன்பு முன்னெடுத்த பல செயல்பாடுகளை அவரும் அறிமுகப்படுத்திவருகிறார். நீதிபதிகளின் எண்ணிக்கையை நான் அதிகப்படுத்தி அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கினேன்,” என்றார் திரு சாக்கி.

“அப்போது பல நீதிபதிகளுக்கு என்மீது அதிருப்தி ஏற்பட்டது. ஏனெனில் வார இறுதிகளில் அவர்கள் ஏதாவது ஒரு தலைப்பிலான வகுப்புக்கு வரவேண்டியிருந்தது.

“நீதிபதிகள் தொடர்ந்து பயிற்சிகள் எடுக்கவேண்டும். எந்த நீதிபதிக்கும் எல்லாம் தெரியும் என்பதில்லை,” என்று அவர் மாநாட்டில் வலியுறுத்தினார்.

நீதித் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவான மாற்றங்களின் பகுதியாக, கீழ் நீதிமன்றங்களில் அதிக அதிகாரிகளைப் பணியமர்த்தும்படி அரசாங்கத்துக்கு தலைமை நீதிபதி வான் ஃபாரிட் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நீதித் துறையில் செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பயன்பாடு குறித்து கருத்துரைத்த திரு சாக்கி அது மிகவும் கவனமாகக் கையாளப்படவேண்டும் என்று கூறினார்.

ஏஐ என்பதை ஒரு வழிகாட்டியாகப் பயன்படுத்த வேண்டும். இறுதி முடிவு மனிதர்களின் தீர்ப்பாகவே இருக்கவேண்டும் என்று அவர் சொன்னார்.

தமது சிந்தனை விரிவாக்கத்துக்கும் புத்தாக்கத்துக்கும் ஏஐ பயன்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

“மனித சிந்தனைத் திறனுக்கும் எடுக்கும் முடிவுகளுக்கும் நிகராக ஏஐ முழுமையாக மாறமுடியாது. ஆனால் நமது பணிகளை அது எளிமையாக்க உதவ முடியும்,” என்றார் அவர்.

ஆரம்பத்தில் வழக்கறிஞர்கள் ஏஐ பயன்பாட்டை நாடினாலும் உண்மையைத் தெளிவாக விசாரித்தே அறிந்துகொள்ள வேண்டும் என்று சாக்கி அஸ்மி கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தலைமை நீதிபதிமலேசியாவழக்கறிஞர்வழக்குநிலுவைவிசாரணைதீர்ப்பு