கோலாலம்பூர்: அனைத்து வகையான வாகனங்களையும் உள்ளடக்கி, சட்டவிரோதமான முறையில் பந்தயங்களையும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதாகச் சந்தேகிக்கப்படும் செயல்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மாதம் திருத்தம் செய்யப்பட்ட மலேசிய சாலைப் போக்குவரத்துச் சட்ட முன்வரைவு 2026 திங்கட்கிழமை (ஜூலை 6) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
விபத்து, காயம், உயிரிழப்பு ஏற்படும்வரை காத்திருக்காமல், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பந்தயங்களுக்கு எதிராக அதிகாரிகள் உடனடியாக அமலாக்க நடவடிக்கை எடுக்க வகைசெய்யும் புதிய பிரிவுகளும் அச்சட்ட மசோதாவில் அறிமுகப்படுத்தி இருப்பது குறித்து வழக்கறிஞர் யோகேஸ் எம். வீரசுந்தரம் விளக்கினார்.
அதன்கீழ், முன்பு 2,000 முதல் 10,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்பட்ட நிலையில், அது தற்போது அதிகரிக்கப்பட்டு குற்றம் புரிபவர்களுக்கு 5,000 முதல் 20,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி, பணியில் ஈடுபடும் சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகளைக் கண்காணிப்பது, அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது அல்லது அமலாக்க நடவடிக்கைகள் குறித்த தகவல்களைக் கசிவடையச் செய்து குற்றவாளிகளைத் தப்பிக்க உதவுவோர்மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் பிரிவு 110B அறிமுகப்படுத்தியிருப்பதாக திருவாட்டி யோகேஸ் விவரித்தார்.
ஒரு நிறுவனம் அல்லது சம்பந்தப்பட்ட முதலாளி, நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தைத் தம் ஊழியருக்கு வழங்கி சட்டவிரோதமாகப் பந்தயங்களில் ஈடுபட அனுமதித்தாலோ, ஊக்குவித்தாலோ அந்நிறுவனத்தின்மீது அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சட்டத் திருத்தம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் கலாசாரத்தை மாற்றி, சாலையில் ஒழுக்கமும் பொறுப்புணர்வும் கொண்ட பண்பாட்டை உருவாக்குவதற்கான பயனுள்ள நடவடிக்கை என்று வழக்கறிஞர் யோகேஸ் கூறினார்.

