ஜோகூர் பாரு: சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் பகுதிக்கும் ஜோகூர் பாருவின் புக்கிட் சகார் பகுதிக்கும் இடையே விரைவு ரயில் சேவைக்கான ரயில் பாதை கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜோகூர் பாருவில் உள்ள விரைவு ரயில் சேவை முனையத்தில் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட இருக்கிறது.
கடைத்தொகுதி, ஹோட்டல், குறுகிய காலத்துக்கு வாடகைக்கு விடப்படும் அடுக்குமாடி வீடுகள், சுகாதார மற்றும் கல்வி வசதிகள் உள்ளடங்கிய கட்டடத்தை மலேசியாவின் எம்ஆர்டி கார்ப் நிறுவனமும் சன்வே குழுமமும் இணைந்து கட்டவிருக்கின்றன.
17,100 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய கட்டடம் எழுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புக்கிட் சகாரில் உள்ள விரைவு ரயில் சேவை நிலையம், ஜோகூர் பாரு குடிநுழைவு வளாகம் ஆகியவற்றுடன் புதிய கட்டடம் இணைக்கப்படும். புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் 2033ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) ஜோகூர் பாருவில் உள்ள ‘டபள்ட்ரீ’ ஹோட்டலில் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கலந்துகொண்டார்.
போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பொதுப் போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள் கூடுதல் வருமானம் ஈட்ட புதிய வழிகளை அமைத்துத் தரவும் மலேசிய அரசாங்கம் இலக்கு கொண்டிருப்பதாக அமைச்சர் லோக் தெரிவித்தார். புதிய திட்டம், இதன் ஒரு பகுதியாக அமைவதாக அவர் கூறினார்.
“அரசாங்கத் துறையும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயல்பட்டு பொது நிதிக்கு நெருக்குதலை ஏற்படுத்தாமல் உலகத் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும் என்பதை எம்ஆர்டி கார்ப் நிறுவனத்துக்கும் சன்வே குழுமத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு காட்டுகிறது,” என்றார் அமைச்சர் லோக்.
சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான விரைவு ரயில் சேவைத் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் 2026ஆம் ஆண்டிறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
புதிய ரயில் பாதையில் உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்திலிருந்து ஜோகூர் பாருவுக்கு ரயில் சேவை வழங்கப்படும். ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்துக்கு 10,000 பயணிகளைக் கையாளும் ஆற்றலைப் புதிய ரயில் பாதை கொண்டிருக்கும்.
புதிய ரயில் பாதை தயாரானதும் அதில் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 40,000 பேர் பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.