வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்திற்குப் புதிய பெயர் சூட்டும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ (எஸ்ஐ) எனும் சொல்லைப் பங்கு, பரிவர்த்தனை ஆணையம் (எஸ்இசி) கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
‘ஏஐ’ எனும் சொல்லைப் பயன்படுத்திய ஃபாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சித் தொகுப்பாளரைக் குறைகூறிய சமூக ஊடகப் பதிவில், தம்மைப் போலவே மொழியில் துல்லியத்தை விரும்பும் ஆணையத் தலைவர் பால் அட்கின்ஸ் விரைவில் அச்சொல்லைக் கட்டாயமாக்குவார் என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் இப்பெயரைப் பயன்படுத்த, முதலீட்டாளர் குழப்பத்தைத் தவிர்க்கும் விதிமுறைகள் அல்லது நிறுவன அறிக்கைகளை ஆய்வுசெய்யும் நடைமுறைகளை ஆணையம் கையாளலாம். எனினும், சட்டபூர்வமாகக் கட்டாயமாக்க செலவு-பயன் பகுப்பாய்வு தேவைப்படும். அதேவேளையில், பேச்சுரிமை தொடர்பான முதலாவது சட்டத் திருத்தத்தை மீறுவதாகக் கூறி வழக்காடலையும் ஆணையம் எதிர்நோக்கக்கூடும்.
இந்த மாற்றங்கள் குறித்து வெள்ளை மாளிகையும் ஆணையமும் உடனடியாக விவரங்களை வெளியிடவில்லை.
முன்னதாக, 2026 தொடக்கத்தில், இடைக்காலத் தேர்தலில் வாக்காளர்கள் வெளிப்படுத்திய தொழில்நுட்பம் குறித்த எதிர்மறைக் கண்ணோட்டத்தை மாற்றும் முயற்சியாக, அனைத்து அதிகாரபூர்வத் தொடர்புகளிலும் ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ அல்லது ‘எஸ்ஐ’ எனப் பயன்படுத்துமாறு நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
தொழில்நுட்பத் தலைவர்கள் இதனை எந்த அளவிற்கு ஏற்பார்கள் என்பது தெளிவாகவில்லை. அண்மைய வெள்ளை மாளிகை நிகழ்ச்சியில், ஸ்பேஸ்எக்ஸ்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி இலான் மஸ்க் ‘ஏஐ’ என்பதற்குப் பதிலாக ‘எஸ்ஐ’ எனத் திருத்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.
