இந்தோனீசியாவில் காட்டுத் தீயைத் தடுக்க புதிய தேசிய அமைப்பு

இந்தோனீசியாவில் காட்டுத் தீயைத் தடுக்க புதிய தேசிய அமைப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

26 Sep 2026 - 7:36 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீயைத் தடுப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாகத் தேசியக் கரிநிலம், சதுப்புநில நிர்வாக அமைப்பை இந்தோனீசியா விரைவில் நிறுவுகிறது.

கரிநிலப் பகுதிகளில் மூளும் தீயைக் கட்டுப்படுத்த அந்த அமைப்பு பெரிதும் உதவும்.

மெர்டேகா அரண்மனையில் கடந்த வியாழக்கிழமை முக்கியச் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதில் கல்வியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்துகொண்டனர்.

கரிநில நிர்வாகம், காட்டுத் தீ அபாயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு புதிய அமைப்பை உருவாக்குவதற்கான முடிவை அதிபர் பிரபோவோ சுபியாந்தோ எடுத்தார்.

இது குறித்து அதிபர் செயலக ஊடகப் பிரிவு அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டது.

புதிய அமைப்பு எந்தவோர் அமைச்சின் கீழும் இயங்காது என்று அதிபர் பிரபோவோ தெரிவித்தார். மாறாக, அது நேரடியாக அதிபரின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் என்று அவர் உறுதியளித்தார்.

தீத்தடுப்பு முறைகள் குறித்து உள்ளூர்ச் சமூகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். அதற்காக ஆயுதப் படையைச் சேர்ந்த 1,000 அதிகாரிகளைப் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்ப அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

தேசியக் காவல் துறை அதிகாரிகளும் புதிய முயற்சியில் விரைவில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல், தீயை வேண்டுமென்றே ஏற்படுத்துவதாகச் சந்தேகிக்கப்படும் நிறுவனங்கள்மீது அரசாங்கம் தொடர் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.

தீச்சம்பவங்களைத் தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், தற்போதைய விதிமுறைகளும் மறுஆய்வு செய்யப்படவுள்ளது.

கண்காணிப்புக் கோபுரங்கள், நீர்த்தேக்கங்கள், தீயணைப்புக் குழுக்கள் போன்றவற்றை ஒவ்வொரு நிறுவனமும் கொண்டிருக்க வேண்டும். சில நிறுவனங்கள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. ஆனால் சில பின்பற்றுவதில்லை.

அந்த நிலையை அரசாங்கம் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று அதிபர் பிரபோவோ வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
காட்டுத் தீபுகைமூட்டம்இந்தோனீசியா