பியூமோன்ட்: புத்தாண்டு நாளன்று அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 15 பேர் மாண்டனர்,
தாக்குதலை நடத்தியவர் 42 வயது ஷம்சுத் தீன் ஜப்பார் என்று அடையாளம் காணப்பட்டது.
இவர் அமெரிக்க நாட்டவர் என்றும் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நியூ ஆர்லின்சில் பலர் புத்தாண்டைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது ஜப்பார் தமது வாகனத்தை வேகமாக ஓட்டி அவர்கள் மீது மோதினார்.
தடுப்புகள்மீது மோதி வாகனத்தைக் கண்மூடித்தனமாக ஓட்டிய ஜப்பார், காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார்.
காவல்துறையினருடனான துப்பாக்கிச்சூட்டில் ஜப்பார் மாண்டார்.
அவர் ஓட்டிய வாகனத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
தாக்குதல் நடத்தியதற்கு முன் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து அவர் காணொளிகளைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, முன்னாள் அமெரிக்க ராணுவ வீரரான ஜப்பாருக்குக் குடும்ப, பணப் பிரச்சினைகள் இருந்ததாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
அண்மையில் அவருக்கு மணமுறிவு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இது அவருக்கு இரண்டாவது மணமுறிவு என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலிருந்து அவர் மீள முடியாமல் தவித்ததாக அறியப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் ஜப்பாரின் தந்தைக்குப் பக்கவாதம் ஏற்பட்டதாகவும் பராமரிப்புச் சேவைக்கான ஏற்பாடுகளைப் பார்த்துக்கொள்ள ஜப்பார் உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வீட்டுக் கடனை அடைக்க முடியாமல் ஜப்பார் சிரமப்பட்டதாக அறியப்படுகிறது.
பணம் செலுத்தாவிடில் வீட்டை இழக்கும் அபாயம் இருப்பதாக 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவரது அப்போதைய மனைவிக்கு ஜப்பார் மின்னஞ்சல் அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சொத்து வர்த்தகம் தொடர்பாகத் தமக்கு இழப்பு ஏற்பட்டதாக மின்னஞ்சலில் ஜப்பார் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

