பியோங்யாங்: வடகொரியாவின் முக்கிய ஏவுதளம் அமைந்துள்ள பகுதியில் புதிய படகுத்துறை (pier) கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
துணைக்கோள்களில் பதிவான படங்களின் மூலம் சோஹெ ஏவுதளத்தில் இந்தப் படகுத்துறை கட்டிமுடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சோஹெ ஏவுதளத்திலிருந்துதான் புதிய துணைக்கோள்கள் பாய்ச்சப்படுகின்றன; மற்ற உந்துகணைச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
துணைக்கோள்களை இயக்கும் ஐசிஇஒய்இ (ICEYE) அமைப்பு இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. முன்பைவிட மேலும் பெரிய உந்துகணைப் பாகங்களை ரயில் வழியாகக் கொண்டு செல்ல புதிய படகுத்துறை வகைசெய்யும் என்று ஐசிஇஒய்இ குறிப்பிட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அது இந்த விவரங்களைத் தெரியப்படுத்தியது.
பெரிய பாகங்களைக் கொண்டு அப்பகுதியிலிருந்து கூடுதல் தூரம் போகக்கூடிய உந்துகணைகளைப் பாய்ச்சலாம்.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், 2022ஆம் ஆண்டு சோஹெ ஏவுதளத்தைச் சோதனையிட்டார். அதைப் புதுப்பிக்குமாறும் பல்வேறு உந்துகணைகளை செலுத்துவதற்குத் தோதான வசதிகளைச் செய்து தருமாறும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
ராணுவம் உளவு பார்க்கப் பயன்படுத்தும் துணைக்கோள்களைச் செலுத்தக்கூடிய உந்துகணைகளைப் பாய்ச்சும் வசதி அவற்றில் அடங்கும் என்று வடகொரிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

