பேங்காக்: தாய்லாந்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தென்பகுதியில் பல்லாண்டாக நீடித்துவரும் தீவிரவாதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவரவும் அமைதிப் பேச்சுக்குப் புத்துயிர் அளிக்கவும் அந்நாட்டு அரசாங்கம் தனது அணுகுமுறையை மாற்றத் தயாராகி வருகிறது.
2004ஆம் ஆண்டு முதல் ‘பாரிசான் ரெவொலுசி நேஷனல்’ (பிஆர்என்) அமைப்பின் தலைமையில் நடந்த போராட்டத்தில் 7,800க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
இப்பகுதியில் ஜூலை மாதம் நடந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் ஐவர் கொல்லப்பட்டனர்.
2013ஆம் ஆண்டில் மலேசியா தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை, அரசாங்க மாற்றங்களாலும் உட்கட்சிப் பூசல்களாலும் அடிக்கடி முடங்கியது.
அமைதிப் பேச்சுவார்த்தையை வழிநடத்த ஏப்ரல் மாதம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தாய்லாந்தின் தேசிய உளவுத்துறைத் தலைவர் தனுத் சுவர்ணானந்தா, தற்போதைய வர்த்தக ரீதியான அணுகுமுறையிலிருந்து விலகிச்செல்ல விரும்புவதாகக் கூறினார்.
“எனது கொள்கை ‘ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தம் இல்லை’ என்பது அன்று,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார்.
வழக்கமான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டிய அவர், முன்பு மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வளர்க்கும் நடவடிக்கைகள் குறைந்த அளவிலான பலன்களையே அளித்ததாகக் குறிப்பிட்டார்.
“தென்பகுதி எல்லைக்கு எந்த வகையான ஆட்சி முறை உண்மையில் பொருத்தமானதாக இருக்கும் என்பது பற்றி நாம் ஏன் விவாதத்தை மீண்டும் தொடங்கிப் பேசக்கூடாது?” என்று திரு தனுத் வினவினார்.
கடந்த காலத்தைவிட இப்போது சுய-நிர்வாக வழிமுறைகளுக்கு அதிக இடமளிக்கத் தாய்லாந்து தயாராக இருப்பதை இது காட்டுகிறது.
தாய்லாந்தின் தென்பகுதி முழுதும் உள்ள சமூகங்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதில், பிஆர்என் அமைப்பை எதிரி என்ற நிலையிலிருந்து உத்தேசப் பங்காளியாக மாற்ற இந்த அணுகுமுறை மூலம் முயற்சி செய்வதாகத் திரு தனுத் கூறினார்.
நிலுவையில் உள்ள பிடியாணைகளுடன் உள்ள அல்லது காவலில் உள்ள சந்தேகத்திற்குரிய கிளர்ச்சியாளர்களுக்கான பொது மன்னிப்புகள், தண்டனைக் குறைப்புகள் முதலியவை பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இத்தகைய திட்டங்கள் இதற்கு முன்பும் விவாதிக்கப்பட்டபோதும் உறுதியான பலன்களை அவை தரவில்லை.
இதுகுறித்து பிஆர்என் அமைப்பு கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.


