பாரிஸ்: பிரான்சில் புதிய அரசியல் நெருக்கடி எழுந்துள்ளது. பிரதமர் பதவியிலிருந்து பிரான்காய்ஸ் பேரோ விலகியுள்ளார்.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரோவுக்கு போதிய ஆதரவு இல்லாததால் அவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் 364 பேர் பேரோவுக்கு எதிராகவும் 194 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.
திரு பேரோவின் வரவுசெலவுத் திட்டம் அவரது கூட்டணிக் கட்சிகளிடையே சரியாக வரவேற்கப்படவில்லை. அது அவருக்குப் பாதகமாக அமைந்தது.
திரு பேரோவின் பதவி விலகலை அதிபர் இமானுவல் மக்ரோன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த பிரதமராக யாரைத் தேர்தெடுப்பது என்ற குழப்பமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார் மக்ரோன். மக்ரோனின் பதவிக் காலத்தில் இதுவரை ஆறு நபர்கள் பிரதமராகப் பொறுப்பு வகித்தனர். தற்போது அவர் ஏழாவது நபரைத் தேடுகிறார்.
இன்னும் சில நாள்களில் திரு மக்ரோன் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பார் என்று பிரெஞ்சு அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடக்காது என்பது உறுதியாகியுள்ளது.
அடுத்த பிரதமர் யார் என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் ஓர் இரு நாள்களில் முழுவிவரம் வெளியாகும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அதிபர் மக்ரோன் நாட்டு மக்களுக்கு உரையாற்றக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரெஞ்சு அதிபராக 2017ஆம் ஆண்டு மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் 2022ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.