பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பொது சுகாதாரக் கட்டமைப்பில் அரசு மருத்துவர்களைத் தொடர்ந்து தக்கவைப்பதே தமது முதன்மை இலக்கு என்று மலேசிய மருத்துவச் சங்கத்தின் புதிய தலைவர் டாக்டர் சிவனேசன் லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.
ஈப்போவில் நடைபெற்ற சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) உரையாற்றிய அவர், முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு, நோய்கள் அதிகரிப்பு காரணமாக நாட்டில் மருத்துவச் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.
மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன், அவர்களின் தொழில் வளர்ச்சி, பணிச்சூழல், சிறப்புப் பயிற்சிகளுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பொதுத் துறையைவிட்டு வெளியேறும்போது, நாட்டின் பராமரிப்புத் தரம் பாதிக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்தார்.
தொற்றா நோய்களைத் தடுக்கவும் நிர்வகிக்கவும் நாடு முழுவதும் உள்ள 11,000க்கும் மேற்பட்ட தனியார், பொது மருத்துவர்களின் (GP) சேவையை அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் சரவாக்கின் உலு பாரம் பகுதியில் பறக்கும் மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நான்கு சுகாதாரப் பணியாளர்கள் உட்பட ஐவர் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர், தொலைதூரப் பகுதிகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஆதரவும் அவசியமாக வழங்கப்பட வேண்டும் என்றார்.

