நியூயார்க்: உலக நாடுகளை உறையவைத்த கொவிட்-19 கிருமித்தொற்று, நுரையீரல் உயிரணுக்களைக் குறிவைப்பதன் மூலம் இன்னும் அதிகளவில் பரவுவதாகப் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கொவிட்-19 கிருமி முக்கிய புரதங்கள் வழி உயிரணுக்களுக்குள் நுழைகின்றன. அந்தப் புரதங்களைச் சுமந்துசெல்லும் சிறிய துகள்களை நுரையீரலில் உள்ள உயிரணுக்கள் வெளியிடுவதாக நியூயார்க்கின் மவுண்ட் சினாயில் உள்ள இகான் மருத்துவக் கல்விக் கழகம் நடத்திய ஆய்வில் குறிப்பிட்டது.
அத்தகைய சிறிய துகள்களை ரத்த நாள உயிரணுக்கள் போன்ற பிற உயிரணுக்கள் ஏற்கும்போது தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகிறது.
உடலின் பிற உயிரணுக்கள், கொவிட்-19 கிருமிக்கு உகந்த புரதங்களை உற்பத்தி செய்யாவிட்டாலும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை இகான் மருத்துவக் கல்விக் கழகத்தின் ஆய்வு சுட்டுகிறது.
ரத்த நாளங்கள், எதிர்ப்புச் சக்தி உயிரணுக்கள் ஆகியவை சேதமடைவதுடன் ரத்தம் கட்டிக்கொள்வது, வீக்கம், உறுப்புகள் செயலிழப்பது போன்றவையும் கிருமித்தொற்றால் ஏற்படும் சில விளைவுகள்.
ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட நுரையீரல்வழி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது சிகிச்சைக்கான உத்தேச வழிகளை வழங்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
நுரையீரல் உயிரணுக்களிலிருந்து புரதங்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் தடுப்பு மருந்துகளால் கொவிட்-19 கிருமித்தொற்று உடலில் அதிக அளவு பரவுவதைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 கிருமித்தொற்றால் உலக அளவில் 7,113,407 பேர் உயிரிழந்ததாக உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
200க்கும் அதிகமான நாடுகளைப் பாதித்த கொவிட்-19 கிருமித்தொற்று 704,753,890க்கும் அதிகமானோரைப் பாதித்துள்ளது.
உலக நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவில்தான் ஆக அதிக கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
இந்தியா இரண்டாவது இடத்திலும் ஃபிரான்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

