கோலாலம்பூர்: மலேசியா, ஊழியர்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்புக் கொடுக்கும் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
வேலையிடத்திற்கு வெளியிலும் அலுவலக நேரத்திற்குப் பிறகும் ஊழியர்களுக்குக் காயம் ஏற்பட்டால் புதிய திட்டம் கைகொடுக்கும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
தொலைதூரத்திலிருந்தும் நீக்குப்போக்கான வேலைநேர ஏற்பாட்டின்கீழும் வேலைசெய்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் அது பொருந்தும்.
ஊழியர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தவும் மலேசியாவின் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்துவதாகத் திரு அன்வார் சொன்னார்.
“வேலைப் பளு என்பது தொழிற்சாலை அல்லது அலுவலகக் கதவுடன் முடிந்துவிடுவது அல்ல என்பதே உண்மை நிலவரம். தற்போதைய நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளின்கீழ் மக்கள் இப்போது எப்படி வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள் என்பதன் அடிப்படையில் திட்டம் பாதுகாப்பை வழங்கும்,” என்றார் அவர்.
உலகச் சமுதாயப் பாதுகாப்புக் கருத்தரங்கு 2025ஐத் தொடங்கிவைத்து மலேசியப் பிரதமர் பேசினார்.
விபத்துகளும் காயங்களும் நேர அட்டவணையின்படி நடப்பதில்லை என்ற அவர், திட்டம் எல்லா நேரத்திலும் ஊழியர்களுக்குப் பாதுகாப்புத் தரும் என்றார்.
வேலை நேரத்திற்கு அப்பால் விபத்துகளைச் சந்திக்கும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடுவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஏற்கெனவே இவ்வாண்டு (2025) பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார்.


