சமூக ஊடகங்களுக்கு உரிமம்: மலேசியாவில் புதிய விதிமுறை அமல்

2 mins read
bb6072bb-2c4d-4c21-902c-91d69cdac8a0
இணையப் பகடிவதை போன்ற பிரச்சினைகளைக் கையாள இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. - படம்: typekids.com / இணையம்

கோலாலம்பூர்: மலேசியாவில் சமூக ஊடகங்கள் தொடர்பிலான புதிய விதிமுறை இந்தப் புத்தாண்டில் நடப்புக்கு வந்துள்ளது.

குறைந்தது எட்டு மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் இருக்கும் சமூக ஊடக, குறுந்தகவல் தளங்கள் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து புதிய உரிமத்தைப் பெற்றிருக்கவேண்டும் என்ற விதிமுறை சென்ற ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மின்னிலக்கத் தளங்கள் கூடுதல் பாதுகாப்பானவையாக இருப்பதை உறுதிசெய்ய அந்நாட்டின் தொடர்பு, பல்லூடகப் பிரிவு அந்த விதிமுறையை அறிமுகப்படுத்தியது.

தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998க்குக்கீழ் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது. கொடுக்கப்பட்ட கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட தளங்கள் புதிய உரிமத்தைப் பெறாதது சட்டப்படி குற்றமாகும். அவற்றின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மலேசியாவின் தொடர்பு, பல்லூடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி டெலிகிராம், டென்சென்ட் உள்ளிட்ட தளங்கள் உரிமத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துவிட்டன. வீசாட் தளத்தை நடத்தும் டென்சென்ட் நிறுவனம், ஏஎஸ்பி(சி) (ASP(C)) என்ற அந்த உரிமத்தைப் பெற்ற முதல் நிறுவனம் என்று தொடர்பு, பல்லூடகப் பிரிவு புதன்கிழமை (ஜனவரி 1) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. பெர்னாமா போன்ற ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டன.

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் ஆகிய தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனம் உரிமம் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டதாகவும் தொடர்பு, பல்லூடகப் பிரிவு குறிப்பிட்டது. எனினும், எக்ஸ், யூடியூப் உள்ளிட்டவற்றை நடத்தும் கூகல் ஆகியவை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இணையப் பகடிவதை போன்ற பெரிய அளவில் இருந்துவரும் இணையப் பிரச்சினைகளைக் கையாள சமூக ஊடகத் தளங்கள் புதிய உரிமம் பெறுவதன் முக்கியத்துவத்தை மலேசியாவின் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் முன்னதாக வலியுறுத்தியிருந்தார் என்று ஃபிரீ மலேசியா டுடே போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.

சம்பந்தப்பட்ட தளங்கள் புதிய விதிமுறைக்கு இணங்கி நடப்பதைத் தமது அமைச்சு அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றும் கட்டாய வயது உச்சவரம்பை விதிக்காத அத்தகைய தளங்கள் மீது அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு நிகழ்ந்த அதிர்ச்சி தரும் சம்பவங்கள் இதுபோன்ற விதிமுறைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையப் பகடிவதைக்கு ஆளான டிக்டாக் பிரபலம் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட துயரமான நிகழ்வு அத்தகைய சம்பவங்களில் ஒன்றாகும்.

சிறார் பாலியல் துன்புறுத்தல் சார்ந்த கருப்பொருள்கள் சம்பந்தப்பட்ட இணையப் பாலியல் குற்றங்களைக் குறிவைத்து கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று மலேசிய காவல்துறையும் தொடர்பு, பல்லூடகப் பிரிவும் முறியடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. அதில் ஓர் 74 வயது ஆடவர் உட்பட 13 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்