கோலாலம்பூர்: மலேசியாவில் சாலை உணவுக் கடை வர்த்தகத்தை சீர்படுத்தும் நோக்கில் புதிய மாறுபட்ட உணவுக் கடைகள் வழங்கப்பட்டுவருகின்றன.
சாலை உணவுக் கடைகளை நடத்திவரும் ஆயிரக்கணக்கான கடைக்காரர்களுக்கு இக்கடைகள் வழங்கப்படுகின்றன. மைகியோஸ்க் (MyKiosk) எனும் இத்திட்டத்துக்கு மலேசிய அரசாங்கம் 150 மில்லியன் ரிங்கிட் (45.47 மில்லியன் வெள்ளி) செலவு செய்கிறது.
இத்தகைய புதிய சாலைக் கடைகளில் ஒன்றை நடத்தும் சையது நுருல் ஃபக்ரி எனும் 45 வயது ஆடவர், மாதந்தோறும் வாடகையாகத் தான் செலுத்தும் 120 ரிங்கிட் நியாயமானது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைகியோஸ்க் திட்டத்தின்கீழ் உள்ள சாலைக் கடைகள் சூரியசக்தித் தகடுகளில் இயங்குகின்றன. சிறிய வர்த்தகர்கள் சட்டபூர்வமாகத் தொழில் நடத்த உதவுவது இத்திட்டத்தின் இலக்காகும். பாதுகாப்பான, கூடுதல் சுத்தம் மிகுந்த, வர்த்தகத்துக்குத் தோதான இடங்களுக்கு அவர்களை இடம் மாற்றுவதும் நோக்கம்.
மைகியோஸ்க் திட்டத்தைப் பற்றி முக்கியமாக எடுத்துரைப்பவர் மலேசியாவின் வீடமைப்பு, உள்ளாட்சி அமைச்சர் கா கோர் மிங். சரியாக விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படாத சூழல்களில் செயல்படும் சிறு தொழில்கள் செய்வோருக்கு அரசாங்கம் உதவிக்கரம் நீட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியா முழுவதும் சாலை உணவுக் கடைக்காரர்கள் சாலையோரங்களில் தற்காலிகக் கடைகளை நடத்திவந்துள்ளனர்.
“மைகியோஸ்க் மூலம் முதல் ஆறு மாதங்கள் அவர்கள் வாடகை செலுத்தத் தேவையில்லை; அதற்குப் பிறகு அதிகபட்சமாக நாளுக்கு 10 ரிங்கிட் வாடகை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்களின் வர்த்தகங்களை ‘சட்டபூர்வ’மானவையாக ஆக்குகிறோம்,” என்று திரு கா முன்னதாக கடந்த மே மாதம் கூறியிருந்தார்.
திரு சையது நுருல் கடை வைத்திருக்கும் அதே இடத்தில் செயல்படும் முகம்மது அஸிஸான் எனும் கடைக்காரர், கடை உள்ள இடம் சுத்தமாகவும் பிறரை ஈர்க்கும் வகையிலும் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதேவேளை, சம்பந்தப்பட்ட எல்லா கடைக்காரர்களும் திருப்திடையவில்லை. திருவாட்டி ஜமிலா (உண்மையான பெயர் அல்ல) வாடகை ஏதுமின்றி வேறு இடத்தில் நாசி லெமாக் விற்று வந்தார். இப்போது மாத வாடகையாக 300 ரிங்கிட் செலுத்தி கடை நடத்தும் இவர், அதிக லாபம் பார்க்க முடியவில்லை என்கிறார்.
சாலை உணவுக் கடை வர்த்தகத்தை மேலும் சீராக்கும் நோக்கில் அக்கடைகளுக்கென வாகன நிறுத்துமிடங்கள், திறந்தவெளிப் பகுதிகள் ஆகியவற்றை அரசாங்கம் ஒதுக்கி வருகிறது.

