கோலாலம்பூர்: கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் விரைவுப் பேருந்தில் பயணம் செய்வோர் இனி கோலாலம்பூரின் லாலாபோர்ட் போக்குவரத்து மையத்தைப் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
லாலாபோர்ட் புக்கிட் பிந்தாங் சிட்டி சென்டரின் மிட்சியு கடைத்தொகுதியில் அந்த மையம் உள்ளது.
பேருந்து நிலையம், பயணிகள் காத்திருப்புப் பகுதி, பயணச்சீட்டு இயந்திரம், போக்குவரத்துகளின் நேரத்தைக் காட்டும் திரை ஆகியன அங்கு உள்ளதாக அவர் புதன்கிழமை (ஜனவரி 21) செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக, அந்தப் போக்குவரத்து மையத்தை அவர் சுற்றிப்பார்த்தார்.
விரைவுப் பேருந்துகள் இதற்கு முன்னர் கோரஸ் ஹோட்டல், பெர்ஜயா டைம்ஸ் சதுக்கம் போன்ற நிறுத்தங்களில் நிற்கும். ஆனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால் அவை பொருத்தமற்றவையாக இருந்தன.
பேருந்து நிறுவனங்கள் தவறிழைப்பதைத் தடுக்க அந்தப் பகுதிகளில் விரைவுப் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமுறையைச் சாலை போக்குவரத்துத் துறை நிறுத்திவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய போக்குவரத்து மையத்தில் இன்னும் சில வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

