புதிய முனையங்கள், புதிய ஓடுபாதை; கோலாலம்பூர் விமான நிலையத்தை விரிவுபடுத்த திட்டம்

2 mins read
d605085d-72f7-47a1-8e2b-183d721298d8
விரிவாக்கம் மூலம் ஆண்டுக்கு 140 மில்லியன் பயணிகளை கையாள கோலாலம்பூர் விமான நிலையம் திட்டமிடுகிறது.  - படம்: பெக்சல்ஸ்

கோலாலம்பூர்: விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை மேலும் பெரிதாக்க மலேசிய போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

மலேசிய நாடாளுமன்றத்தில் விமான நிலையத்தின் விரிவாக்கம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு போக்குவரத்து அமைச்சு எழுத்து மூலம் பதிலளித்தது.

“விமான நிலையத்தின் பெருந்திட்டத்தில் சில முனையங்களை விரிவாக்கம் செய்வது குறித்து பேசி வருகிறோம். மேலும் கட்டங்கட்டமாக முனையம் 1 மற்றும் முனையம் 2 ஆகியவற்றை விரிவாக்கம் செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்,” என்று அமைச்சு குறிப்பிட்டது.

தற்போது முனையம் 1 ஆண்டுக்கு 30 மில்லியன் விமானப் பயணிகளை கையாள்கிறது. விரிவாக்கம் செய்தால் அது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 59 மில்லியன் பயணிகளை கையாள முடியும் என்று கூறப்படுகிறது.

அதே நேரம் இரண்டாம் முனையம் தற்போது ஆண்டுக்கு 45 மில்லியன் பயணிகளை கையாள்கிறது. விரிவாக்கம் செய்தால் அது 67 மில்லியனை எட்டக்கூடும்.

“கோலாலம்பூர் விமான நிலையக் குழுமமும் (MAHB) விமான நிலையத்தில் நான்காவது ஓடுபாதையை உருவாக்க விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் மூன்றாம் முனையத்தை கட்டவும் அது எண்ணம் கொண்டுள்ளது,” என்று மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

விரிவாக்கம் மூலம் ஆண்டுக்கு 140 மில்லியன் பயணிகளைக் கையாள கோலாலம்பூர் விமான நிலையம் திட்டமிடுகிறது. அதேபோல் ஒரு மணி நேரத்திற்கு 154 விமானங்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தற்போது அந்த எண்ணிக்கை 108ஆக உள்ளது.

இதற்கிடையே கோலாலம்பூர் விமான நிலையக் குழுமம் மேலும் இரண்டு முனையங்களை கட்டத் திட்டமிடுகிறது. ஒரு முனையம் தனியார் மற்றும் வசதிபடைத்தோருக்கான முனையம். பணம் செலுத்தி அந்த முனையத்தை பயன்படுத்தலாம்.

மற்றொரு முனையம் உம்ரா பயணிகளுக்கானது என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்