தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானுடன் வரி விதிப்பு பேச்சுவார்த்தை: நம்பிக்கையில் புதிய அமெரிக்க தூதர்

2 mins read
18e60517-e3c3-47bb-a4a6-43c42cd0f6c7
அமெரிக்க, ஜப்பான் இரு நாட்டு உறவுகளை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதே தமது தலையாய பணி என்று ஜப்பானுக்கான புதிய அமெரிக்க தூதர் ஜார்ஜ் கிளாஸ் கூறியுள்ளார். - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பான், அமெரிக்கா இடையிலான இரு நாட்டு உறவுகள் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இதைக் குறிப்பிட்டுப் பேசிய ஜப்பானுக்கான புதிய அமெரிக்க தூதர் ஜார்ஜ் கிளாஸ், அந்நாட்டுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைமீது தான் நம்பிக்கை வைத்துள்ளதாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11ஆம் தேதி) தெரிவித்தார்.

பல நாடுகளுக்கு எதிராக விதித்த வரிச் சுமையை 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ள நிலையில், ஜப்பானும் அமெரிக்காவும் முழு அளவிலான பேச்சுவார்த்தையை அடுத்த வாரத் தொடக்கத்தில் மேற்கொள்ளவுள்ள நிலையில் ஜப்பானுக்கான புதிய அமெரிக்க தூதர் மேற்கண்டவாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம், மிகுந்த நம்பிக்கையுடன்,” என்று அவர் வாஷிங்டனில் ஜப்பானிய தூதரகம் அளித்த விருந்துபசாரத்தில் கூறினார்.

தூதர் என்ற முறையில் ஜப்பானில் உள்ள அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்பு, தற்காப்பு, பொருளியல் பிரச்சினைகள் உட்பட அனைத்தும் தமது பொறுப்பு என்பதை தான் நன்கு உணர்ந்துள்ளதாக அவர் விளக்கினார்.

எனினும், தமது பணியில் மிக முக்கியமான ஒன்று தற்பொழுது நல்ல நிலையில் இருக்கும் இரு நாட்டு உறவுகளை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதுதான் என்று, அடுத்த வாரம் தோக்கியோ செல்லவிருக்கும் திரு கிளாஸ் தெரிவித்தார்.

“ஜப்பானிய தூதராகச் செல்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன். என் வாழ்வில் நான் இதுவரை செய்ததைவிட இது மிகப் பெரிய ஒன்று,” என்று அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் நிலச் சொத்து, முதலீட்டாளராக விளங்கிய திரு கிளாஸ் பெருமிதத்துடன கூறினார்.

அறுபத்து நான்கு வயது நிரம்பிய திரு கிளாசை ஏப்ரல் 8ஆம் தேதி ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதராக அமெரிக்க செனட் சபை உறுதி செய்தது. இதற்கு முன்னர், 2017ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை இவர் போர்ச்சுகல் நாட்டிற்கு தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்புச் சொற்கள்