80,000 புதிய வீடுகளுக்கு நியூயார்க் நகர மன்றம் ஒப்புதல்

2 mins read
d40f8b8d-ab97-4aa2-aad6-58cf1a2a4d4c
ஒவ்வோர் அக்கம்பக்கக் குடியிருப்புப் பேட்டையிலும் மேலும் சில வீடுகளைக் கட்டுவது இலக்கு. - படம்: நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க்: நியூயார்க் நகர மன்றம் 80,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டத்திற்கு டிசம்பர் 6ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.

‘சிட்டி ஆஃப் எஸ்’ திட்டத்தின்கீழ், அடுத்த 15 ஆண்டுகளில் அந்த வீடுகள் கட்டப்படும்.

கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவில் நியூயார்க் நகரில் ஏற்பட்டுள்ள வீடமைப்பு நெருக்கடிக்குத் தீர்வுகாணும் குறிப்பிடத்தக்க முயற்சியாக இத்திட்டம் கருதப்படுகிறது.

நகர மேயர் எரிக் ஆடம் முன்னுரிமை தந்துள்ள இத்திட்டத்தில், கூடுதலான வீடுகளைக் கட்டும் வகையில் வட்டார அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரை நூற்றாண்டு காணாத அளவில் நியூயார்க்கில் காலியான வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதேவேளையில் வீட்டு வாடகை மிக அதிகமாக உள்ளது.

பல மாதங்கள் நீடித்த பேச்சுகளுக்குப் பிறகு, 51 உறுப்பினர்களைக் கொண்ட நியூயார்க் நகர மன்றம் நடத்திய வாக்கெடுப்பில் 31 பேர் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

வீட்டு வாடகை தொடர்பில் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை நகரமன்றத் தலைவர்கள் அனைவரும் அறிந்துள்ளனர்.

நியூயார்க் மக்களில் வீடற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு (2023) அரசுப் பள்ளி மாணவர்களில் எட்டில் ஒருவர் வீடற்றவராக இருந்தார்.

கிட்டத்தட்ட 500,000 குடும்பங்கள் தங்கள் வருவாயில் பாதியை வீட்டு வாடகைக்குச் செலவிட்டதாகக் கூறின.

மேயர் ஆடமும் அவரது நிர்வாகத்தினரும் கட்டுப்படியாகக்கூடிய விலையிலான வீடமைப்பு, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குக் கூடுதலாக ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கு ஒப்புக்கொண்டனர். முன்னர் பரிந்துரைக்கப்பட்ட சில திட்டங்களில் குறிப்பிடப்பட்டிருந்த செலவுத் தொகையை அவர்கள் குறைத்துக்கொண்டனர்.

புதிய கட்டுமானங்களுக்கான விதிமுறைகளை மாற்றியமைப்பதன் மூலம், ஒவ்வோர் அக்கம்பக்கக் குடியிருப்புப் பேட்டையிலும் மேலும் சில வீடுகளைக் கட்டுவது இலக்கு.

புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புகளில் கார் நிறுத்துமிடம் தொடர்பான விதிமுறைகளை மாற்றுவது, கடைகளின் மேல்தளத்திலும், நிலத்தடித் தளங்களிலும் வீடுகளைக் கட்டுவது போன்றவற்றின் மூலம் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்