ரஷ்யாவின் உளவுக் குற்றச்சாட்டை மறுக்கும் நியூசிலாந்து

ரஷ்யாவின் உளவுக் குற்றச்சாட்டை மறுக்கும் நியூசிலாந்து

கோப்புப் படம்: ஏஎஃப்பி

28 Jul 2026 - 4:47 pm

1 mins read

வெலிங்டன்: ரஷ்யாவில் உளவு பார்க்க தங்கள் நாட்டின் குடிமகனை நியூசிலாந்து நியமித்ததாக ரஷ்யா சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நியூசிலாந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) மறுத்துள்ளது.

நியூசிலாந்து உளவு அமைப்புக்கு ரஷ்யாவின் பாதுகாப்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் ரகசியத் தகவல்களை வழங்கிய ரஷ்யாவின் கபரோவ்ஸ்க் நகரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய கூட்டமைப்பு பாதுகாப்புச் சேவை கூறியது.

வழக்கமாக உளவுத்துறை சார்ந்த செயல்பாடுகளில் கருத்துத் தெரிவிப்பதில்லை என்று குறிப்பிட்ட நியூசிலாந்தின் உளவுத்துறை, ரஷ்ய அரசின் ஊடகச் செய்திகள் பெரும்பாலும் துல்லியமானவை அல்ல, அவற்றை எளிதில் நம்ப முடியாது என்றது.

உளவுத்துறை விவகாரங்களில் கருத்துக் கூறாமல் இருக்கும் நாட்டின் நடைமுறையைத் தாம் பின்பற்றுவதாக நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்ஸன் கூறியுள்ளார்.

பாதுகாப்புத் தொடர்பான உளவு விவகாரங்களில் நான் கருத்துக் கூறுவதில்லை என்று அவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கூறினார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் ‘ஃபைவ் ஐஸ்’ (Five Eyes) உளவுக் கூட்டணியில் நியூசிலாந்தும் அங்கம் வகிக்கிறது.

வரலாற்று ரீதியாக ரஷ்யாவே பிற நாடுகளை உளவு பார்த்து வந்துள்ளது. நியூசிலாந்துமீது ரஷ்யா பழிசுமத்துவது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் பாதிக்கக்கூடும் என்று அனைத்துலக அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உக்ரேன்மீதான போரால் ரஷ்யா மீது நியூசிலாந்து தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்