வெலிங்டன்: நியூசிலாந்திலிருந்து வெளியேறும் மக்கள் தொகை 2024ஆம் ஆண்டில் சாதனை அளவை எட்டியுள்ளது. நாட்டின் பொருளியல் பலவீனமடைந்ததன் மற்றோர் அறிகுறி இது. மூன்றாம் காலாண்டில் அங்கு தொழில்நுட்ப பொருளியல் மந்தநிலை ஏற்பட்டது.
நியூசிலாந்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, 2024 நவம்பர் வரையில் 127,800 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இது முந்தைய 12 மாத காலத்தைவிட 28 விழுக்காடு அதிகம். ஆண்டு அடிப்படையில் வெளியேறும் மக்கள் எண்ணிக்கையில் இது ஆக அதிகளவு என அந்நாட்டு புள்ளி விவரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டைவிட்டு வெளியேறுவோரில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் நியூசிலாந்து குடிமக்கள். 5.3 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட நியூசிலாந்து, வரலாற்றிலேயே மிக அதிக பணவீக்கத்தைக் குறைக்க, அதிகாரபூர்வ பண விகிதத்தை மத்திய வங்கி அதிகரித்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் பொருளியல் தள்ளாடுகிறது.
வேலை வாய்ப்புகளுக்காக ஏராளமானோர் நியூசிலாந்து வருவதாகவும் வாய்ப்புகள் இல்லாதுபோகும் மக்கள் அங்கிருந்து சென்றுவிடுவதாகவும் வெஸ்ட்பேக் நிறுவனத்தின் மூத்த பொருளியல் நிபுணர் திரு மைக்கல் கோர்டன் தெரிவித்தார்.
எனினும், மக்கள் வெளியேற்றம், இடம்பெயரும் மக்கள் தொகையால் தொடர்ந்து ஈடுசெய்யப்படுகிறது. நியூசிலாந்தைவிட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், நிரந்தரமாக நியூசிலாந்துக்குக் குடிபெயர்வோரின் எண்ணிக்கை 2024ல் நவம்பர் மாதம் வரையில் 30,600 ஆக இருந்தது. 2023ல் அக்டோபர் மாதம் வரையில் நிகர இடம்பெயர்வு 135,700 ஆக உச்சத்தை எட்டியது என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
நீண்ட காலத்தில் நிகர புலம்பெயர்வு நாட்டின் பொருளியலை ஆதரிக்கும் என்றும் திரு கோர்டன் கூறினார்.