வெலிங்டன்: நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் நிலச்சரிவு ஏற்பட்டதில் ஆறு பேர் மாயமாகினர்.
புதையுண்டோரைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்நிலையில், சடலம் ஒன்றை மீட்புப் பணியாளர்கள் மீட்டதாக நியூசிலாந்துக் காவல்துறை சனிக்கிழமை (ஜனவரி 24) தெரிவித்தது.
எஞ்சியோரும் மாண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சடலங்களைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
இது மீட்புப் பணியாளர்களையும் மாண்டோரின் குடும்பத்தாரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியிருப்பதாகக் காவல்துறை கூறியது.
நிலச்சரிவில் காணாமல் போனவர்களில் இரண்டு பதின்மவயதினரும் அடங்குவர்.
அவர்களில் இளையவருக்கு 15 வயது.
தொடர்புடைய செய்திகள்
நியூசிலாந்தில் விடுமுறையின்போது பலர் மவுண்ட் மவுங்கானுயுக்குச் சென்று அங்கு கூடாரகூங்கள் அமைத்து முகாமிடுவது வழக்கம். வியாழக்கிழமை (ஜனவரி 22) காலை அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் கூடாரங்கள், முகாம் வாகனங்கள், நீச்சல் குளம், கழிவறைக் கட்டடம் ஆகியவை புதையுண்டன.
அண்மையில், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் புயல் வீசியது.
இதன் காரணமாக ஆறுகள் நிரம்பி வழிந்தன.
வெள்ளம் கரைபுரண்டோடியதில் பிரதான சாலைகளுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

