தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெற்றோருக்கு 10 ஆண்டு விசா: பல்லாயிரம் நியூசிலாந்து இந்தியர் பலனடைவர்

2 mins read
d8b05248-340e-4c67-b3d0-775b9bf4c47b
பெற்றோர் நீண்டகால விசா கோரி ஆண்டுதோறும் 10,000 வரையிலான விண்ணப்பங்கள் வரக்கூடும் என்று நியூசிலாந்து அரசாங்கம் எதிர்பார்க்கிறது. - கோப்புப் படம்: ஊடகம்

வெலிங்டன்: நியூசிலாந்துவாசிகளின் பெற்றோருக்குப் புதிய நீண்டகால விசா வழங்கும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘பெற்றோர் ஊக்குவிப்பு விசா’ (Parent Boost Visa) என்னும் அந்தத் திட்டத்தின்கீழ், நியூசிலாந்தில் குடிமக்களாகவும் நிரந்தர வசிப்பாளராகவும் உள்ளோரின் வெளிநாட்டு பெற்றோர் பத்து ஆண்டுகள் வரை நியூசிலாந்தில் தங்கி இருக்கலாம்.

அந்தப் புதிய சலுகை, இவ்வாண்டு செப்டம்பர் மாதம் நடப்புக்கு வருகிறது. செப்டம்பர் 29ஆம் தேதி முதல், நீண்டகால பெற்றோர் விசாவுக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய குடிநுழைவு விதிகளின்படி, வெளிநாட்டு பெற்றோர் நியூசிலாந்தில் சில மாதங்கள் மட்டுமே தங்கி இருக்க முடியும்.

அதிகமான வெளிநாட்டுத் திறனாளர்களை ஈர்க்கும் நோக்கில் நியூசிலாந்து அரசாங்கம் பெற்றோர் ஊக்குவிப்பு விசாத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

பெற்றோரைப் பிரிந்து நியூசிலாந்தில் வசித்து, வேலை செய்து வரும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினருக்கு நீண்டகால விசா சலுகை பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இந்தியர்களுக்கு அது ஓர் இனிப்பான செய்தி

இந்திய வெளியுறவு அமைச்சின் புள்ளிவிவரப்படி, நியூசிலாந்தில் ஏறத்தாழ அரை மில்லியன் இந்தியர்கள் வசிக்கிறார்கள்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் 80,000 பேரும் இந்திய வம்சாவளியினர் 160,000 பேரும் வெளிநாட்டு இந்தியர்கள் 240,000 பேரும் நியூசிலாந்தில் வசிப்பதாக அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பெரும்பாலானோரின் பெற்றோர் இந்தியாவில் வசிக்கின்றனர். புதிய விசா சலுகையால் நியூசிலாந்து இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிற நாடுகளிலிருந்து நியூசிலாந்துக்குப் புலம் பெயர்ந்த இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கும் இந்தச் சலுகை நல்ல பலனளிக்கும் என்று கூறப்படுகிறது.

நியூசிலாந்தின் புதிய விசா விதிப்படி, தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பெற்றோருக்கு முதற்கட்டமாக ஐந்தாண்டு விசா வழங்கப்படும். விதிமுறைகளைச் சரிவரப் பின்பற்றும் அவர்களுக்கு மீண்டும் ஐந்தாண்டு விசா வழங்கப்படும். விசா காலத்தில் அவர்கள் பலமுறை நியூசிலாந்து வந்துசெல்லலாம்.

புதிய சலுகையை விவரித்த நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டஃபர் லக்ஸன், பெற்றோர் ஊக்குவிப்பு விசாவுக்கு ஆண்டுதோறும் 2,000 முதல் 10,000 வரையிலான விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

“விண்ணப்பங்களுக்கு அதிகபட்ச வரம்பு எதுவுமில்லை. இருப்பினும், 2027ஆம் ஆண்டுவாக்கில் அதுபற்றி மறுஆய்வு செய்யப்படும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்