மின்னிலக்கத் திறனாளர்களை ஈர்க்க விசா கட்டுப்பாடுகளில் நியூசிலாந்து தளர்வு

2 mins read
93853709-1e21-45ec-b139-a862535d7ccd
புதிய விசா விதிமுறைகளை நியூசிலாந்து திங்கட்கிழமை (ஜனவரி 27) அறிவித்தது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இணையம் வாயிலாக வேலை செய்வோரை தன்பக்கம் ஈர்க்கும் வகையில் நியூசிலாந்து தனது வருகையாளர் விசாவுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளது.

உலகின் எந்த மூலையில் இருந்தும் வேலை செய்யக்கூடிய திறனாளர்களால் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்று நியூசிலாந்து நம்புகிறது.

அதனால், நலிவடைந்துள்ள தனது பொருளியலுக்கு புத்துணர்வூட்டும் வகையில் திங்கட்கிழமை (ஜனவரி 27) விசா கட்டுப்பாடுகளைத் தளர்க்கும் அறிவிப்பை நியூசிலாந்து நிதி அமைச்சர் நிக்கோலா வில்லிஸ் வெளியிட்டார்.

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணியாக வரும் வெளிநாட்டினர் ஒன்பது மாதங்கள் வரையில் அங்கு தங்கி இருக்கலாம். ஆனால், அவர்கள் வெளிநாட்டு முதலாளிகளுக்காக வேலை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. அந்தக் கட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டு உள்ளதாக திருவாட்டி வில்லிஸ் கூறினார்.

“முற்றிலும் புதிய வகை வருகையாளர்களுக்காக விசா தனது கதவுகளைத் திறந்துள்ளது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

உலகத் திறனாளர்களை வரவேற்கும் இடம் என்னும் பட்டியலில் நியூசிலாந்தையும் இடம்பெறச் செய்யும் வகையில் புதிய விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் எண்ணுவதாக அவர் தெரிவித்தார்.

“சுற்றுப் பயணிகளுக்காக விசாவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அவர்கள் நியூசிலாந்து நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதில் மாற்றமில்லை.

“எனவே நியூசிலாந்து குடிமக்களின் வேலைகளுக்குப் போட்டியாக வெளிநாட்டினர் இருக்க மாட்டார்கள்,” என்றும் திருவாட்டி வில்லிஸ் விளக்கினார்.

2024 மூன்றாம் காலாண்டில் நியூசிலாந்து பொருளியல் நிலவரம் மந்தநிலைக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு மோசமாக இருந்தது. அதனைத் தூக்கி நிறுத்தும் முயற்சியாக உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்பத் திறனாளர்களை வரவேற்கும் பிரசார விளம்பரங்களை நியூசிலாந்து வெளியிட உள்ளதாக அவர் கூறினார்.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் திறனாளர்களைப் பெரிதும் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய ஊழியர்களோடு அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களையும் நியூசிலாந்து வரவேற்பதாகக் கூறினார்.

இணையம் வாயிலாகப் பணிபுரியும் மின்னிலக்கத் திறனாளர்கள் அதிக வருவாய் ஈட்டுக்கூடியவர்கள் என்பதால் கடைகள், உணவகங்கள் மற்றும் தங்குவிடுதிகளில் வர்த்தகம் பெருகும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்