தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நியூசிலாந்து உறுப்பினர்

2 mins read
6ff87d1d-f4bd-4145-a77f-229ef7dc9811
பாலஸ்தீன் குறித்து நடைபெற்ற காரசாரமான விவாதத்தை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் குளோயி சுவோர்பிரிக் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். - படம்: குளோயி சுவோர்பிரிக் / ஃபேஸ்புக்

வெல்லிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன் தொடர்பில் நடைபெற்ற காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் குளோயி சுவார்பிரிக் கூட்டத்தைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அடையாளப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக நடு வலதுசாரி அரசாங்கம் நேற்று (ஆகஸ்ட் 11) கூறியதை அடுத்து அவசர கூட்டத்துக்கு அழைப்புவிடப்பட்டது.

நியூசிலாந்தின் நெருங்கிய நட்பு நாடான ஆஸ்திரேலியா, செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 11ஆம் தேதி கனடா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாட்டு நிறுவன மாநாட்டில் பாலஸ்தீனத்தைத் தனி நாடாகக் கருதப்போவதாகக் கூறியது.

கிரீன் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திருவாட்டி சுவோர்பிரிக், நியூசிலாந்து பின்தங்கியிருப்பதாகவும் பாலஸ்தீன விவகாரத்தில் தீர்மானம் எடுக்க முடியாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் சொன்னார்.

போர்க் குற்றங்களுக்காக இஸ்ரேல்மீது தடைகள் விதிக்கும் மசோதாவுக்கு அரசாங்க உறுப்பினர்கள் சிலர் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்றும் திருவாட்டி சுவார்பிரிக் வலியுறுத்தினார்.

அந்த மசோதா அவரது கிரின் கட்சியால் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன.

“68 அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் முதுகெலும்புள்ள 6 உறுப்பினர்களைக் கண்டுபிடித்தால் சரியான வரலாற்றுப் பக்கத்தில் நாம் நிற்கலாம்,” என்று திருவாட்டி சுவோர்பிரிக் சாடினார்.

அத்தகைய கருத்து முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று எனக் குறிப்பிட்ட நாடாளுமன்ற நாயகர் கெரி பிரௌன்லீ திருவாட்டி சுவோர்பிரிக் மன்னிப்புக் கேட்கும்படியும் சொன்ன கருத்தைத் திரும்ப பெறும்படியும் கூறினார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த திருவாட்டி சுவோர்பிரிக்கை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றும்படி திரு பிரௌன்லீ உத்தரவிட்டார்.

திருவாட்டி சுவோர்பிரிக் நாளை (ஆகஸ்ட் 13) நாடாளுமன்றத்திற்குத் திரும்பலாம் என்ற திரு பிரௌன்லீ, அவர் மீண்டும் மன்னிப்புக் கூற மறுத்தால் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படுவார் என்றார்.

குறிப்புச் சொற்கள்