இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்

இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்

2 mins read
0dc3789d-53bb-4c44-8ce1-d42113c02be4
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி, மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் கப்பல் ஒன்றில் இருந்த சரக்குக் கொள்கலன்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

வெலிங்டன்: இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான சட்ட மசோதாவுக்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 16) ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நியூசிலாந்தின் கிட்டத்தட்ட 95 விழுக்காடு பொருள்களுக்கான தீர்வைகள் முற்றிலும் நீக்கப்படும் அல்லது கணிசமாகக் குறைக்கப்படும்.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அச்சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 29 வாக்குகளும் பதிவாகின. எதிர்த்தரப்பு தொழிற்கட்சியும் அம்மசோதாவுக்கு ஆதரவளித்தது.

ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முதல் நாளிலிருந்தே, அதில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட பொருள்களுக்குத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஏற்றுமதியாளர்களுக்கு இதன் பலன்கள் உடனடியாகவும் கணிசமாகவும் கிடைக்கும் என நியூசிலாந்தின் வர்த்தக அமைச்சர் டோட் மெக்லே அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், “உயர்தரமிக்க இந்த ஒப்பந்தம் நடப்பாண்டிலேயே நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் எங்களின் நடப்பு ஆட்சிக் காலத்திற்குள் இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்,” என அவர் பெருமிதத்தோடு கூறினார்.

அந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்து இந்தியப் பொருள்களுக்கும் நியூசிலாந்தில் தீர்வை விலக்குக் கிடைக்கும். அத்துடன், வரும் 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யவும் நியூசிலாந்து அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

இரு நாடுகளும் இந்த வர்த்தக உடன்பாட்டில் முதன்முதலில் கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்திட்டன.

2026 ஜூன் வரையிலான ஓராண்டில் இருதரப்பு வர்த்தகம் மொத்தம் 2.29 பில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது. நியூசிலாந்தின் பொருள் சேவைகளுக்கான ஒன்பதாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக இந்தியா விளங்குகிறது.

உறுதிப்படுத்தும் நடைமுறைகளை இரு நாடுகளும் நிறைவு செய்த பிறகு இந்த வர்த்தக ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக நடப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
நியூசிலாந்துஇந்தியாவர்த்தகம்உடன்பாடுநாடாளுமன்றம்