வெலிங்டன்: அதிகமானோரை ஈர்க்கும் இயற்கைச் சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கட்டணம் விதிப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக நியூசிலாந்து வளக்காப்புத்துறை (Conservation) அமைச்சர் டாமா பொடாக்கா தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்பில் வியாழக்கிழமை (மே 7) ‘வளக்காப்புத் திருத்த மசோதா’ தாக்கல் செய்யப்பட்டது.
பேணிக்காக்கப்படும் நிலங்களில் செயல்படும் நிறுவனங்கள் எளிதாகச் சலுகைகளைப் பெறவும் இந்த மசோதா வழிவகுக்கும்.
இதன்மூலம், இந்தியாவின் தாஜ்மஹால் முதல் பெருவின் மச்சு பிச்சு கோட்டை வரை சுற்றுலாத் தலங்களுக்கு வெளிநாட்டினரிடம் கட்டணம் வசூலிக்கும் நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்தும் இணைகிறது.
“நியூசிலாந்து மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள தேசியப் பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட கட்டணம் செலுத்துகின்றனர். அதுபோலவே, இந்த மாற்றங்கள் நியூசிலாந்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு வருகைதரும் வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து தகுந்த பங்களிப்பைப் பெற அனுமதிக்கும்,” என்று திரு பொடாக்கா கூறினார்.
அதே சமயம், நியூசிலாந்து மக்கள் தொடர்ந்து கட்டணமின்றி அந்த இடங்களுக்குச் செல்ல முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்தக் கட்டணங்கள் மூலம் ஆண்டுக்கு ஏறக்குறைய 60 மில்லியன் நியூசிலாந்து டாலர் (S$45 மில்லியன்) வருவாய் ஈட்ட முடியும் என்பது அந்நாட்டு அரசின் எதிர்பார்ப்பு.
அத்தொகை மீண்டும் வனப்பாதுகாப்பு, பல்லுயிர்ச்சூழல், மரபுடைமைத் தலங்கள், நடைபாதைகள், தங்குமிடங்கள், சுற்றுலா உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக முதலீடு செய்யப்படும் என்று திரு பொடாக்கா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
எவ்வளவு கட்டணம், அது எவ்வாறு வசூலிக்கப்படும் என்பன போன்ற விவரங்கள் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.

