வெல்லிங்டன்: ஈரான் மீது மீண்டும் தடை விதிப்பதாக நியூசிலாந்து தெரிவித்திருக்கிறது. நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) அத்தகவலை வெளியிட்டார்.
அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட விரிவான கூட்டுத் திட்ட நடவடிக்கைகளின் கோட்பாடுகளை ஈரான் பின்பற்றவில்லை என்கிறது வெல்லிங்டன். அதனால் மீண்டும் தடை விதிக்கப்படுவதாக நியூசிலாந்து கூறியது. விரிவான கூட்டுத் திட்ட நடவடிக்கை 2015ஆம் ஆண்டு கையெழுத்தானது.
புதிய தடை, சனிக்கிழமை (அக்டோபர் 18) நடப்புக்கு வரும். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்ததைத் தொடர்ந்து நியூசிலாந்தின் அறிவிப்பு வந்துள்ளது. உடன்பாட்டை டெஹ்ரான் அத்துமீறியதாக அது குறிப்பிட்டது. ஆகஸ்ட்டில் சிட்னி, மெல்பர்ன் நகரங்களில் ஈரான் தீவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஆஸ்திரேலியா குற்றஞ்சாட்டியது. நாட்டைவிட்டு ஏழு நாளுக்குள் வெளியேறும்படி ஈரானியத் தூதருக்கு அது உத்தரவிட்டது.
புதிய தடைகளின்படி, சொத்துகள் முடக்கப்படும். தடைசெய்யப்பட்டோருக்குப் பயணத் தடை விதிக்கப்படும். சில வகை அணு, ராணுவப் பொருள்களின் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் அனுமதி மறுக்கப்படும்.
ஈரானுடன் பணியாற்றும்போது விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தியது நியூசிலாந்து.
“ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தடைகள் மீண்டும் விதிக்கப்படுவது, அனைத்துலகச் சமூகத்தின் அக்கறைகளைப் பிரதிபலிக்கிறது. அணுசக்தி தொடர்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஈரான் மீறியதாலும் யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாத அளவுக்கு அது கூட்டியதாலும் கவலை எழுந்துள்ளது,” என்றார் திரு பீட்டர்ஸ்.
எங்கிருந்து வந்தாலும் அணுவாயுதப் பரவலைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் அரசதந்திர முயற்சிகளுக்கு நியூசிலாந்து தொடர்ந்து ஆதரவளித்து வந்திருப்பதை அவர் சுட்டினார். ஈரான் மீண்டும் சமரசப் பேச்சில் ஈடுபடவேண்டும் என்றும் அனைத்துலக அணுசக்தி அமைப்புடன் மீண்டும் முழுமையாக ஒத்துழைக்க முன்வரவேண்டும் என்றும் நியூசிலாந்து அமைச்சர் கேட்டுக்கொண்டார்.