வெலிங்டன்: நியூசிலாந்தில் ஆட்சி அமைக்க, ஏசிடி நியூசிலாந்துடனும் ‘நியூசிலாந்து ஃபர்ஸ்ட்’ உடனும் ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக நியூசிலாந்தின் தேசிய கட்சி கூறியிருக்கிறது.
காபந்து அரசாங்கத்தின்கீழ் பல வாரங்களாக நாட்டில் நிலவிய அரசியல் நிச்சயமின்மையும் பேச்சுவார்த்தைகளும் ஒரு முடிவுக்கு வந்துள்ளன.
நியூசிலாந்தில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றிகண்டது.
இருப்பினும், ஆட்சி அமைக்க அதற்கு ஏசிடி நியூசிலாந்து, ‘நியூசிலாந்து ஃபர்ஸ்ட்’ கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது.
மூன்று கட்சிகளும் அடுத்த மூவாண்டுகளுக்கான அரசியல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து அமைச்சர்களின் பதவிகளைத் தீர்மானிக்கவேண்டும் என்பதால் அதன் தொடர்பில் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவியது.
‘நியூசிலாந்து ஃபர்ஸ்ட்’ கட்சியின் வின்ஸ்டன் பீட்டர்சும் ஏசிடி கட்சியின் டேவிட் சிமோரும் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றிருப்பதை உறுதிசெய்தனர்.
சிரமப்படும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நியூசிலாந்து நாட்டவருக்கு உதவப் போவதாகவும் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரப் போவதாகவும் கூறியிருந்த தேசிய கட்சி, வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றது.

