வெலிங்டன்: நியூசிலாந்தில் உள்ள சொகுசு வீடுகளை வாங்குவதில் சிங்கப்பூரைச் சேர்ந்த செல்வந்தர்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நியூசிலாந்துக்கு தங்கள் ஊழியர்களுடன் தனியார் விமானங்களில் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
அங்கு அவர்கள் வெறும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தங்கி பல சொகுசு வீடுகளைச் சென்று பார்க்கின்றனர்.
இத்தகைய வீடுகளின் விலை ஏறத்தாழ 35 மில்லியன் நியூசிலாந்து டாலர் (S$26.6 மில்லியன்).
நியூசிலாந்தில் சொகுசு வீடுகளை வாங்க முற்படும் சிங்கப்பூர் செல்வந்தர்கள் சௌகரியத்தையும் தனித்துவத்தையும் தரும் பெரிய வீடுகளை விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, விமான நிலையத்துக்கு அருகில் இருத்தல், தனிமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அவர்கள் முன்னுரிமை தருவதாக நியூசிலாந்து சொத்து முகவர்கள் கூறுகின்றனர்.
நியூசிலாந்தில் சொகுசு வீடுகளை வாங்கும் சிங்கப்பூர் செல்வந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நியூசிலாந்தின் குவீன்ஸ்டவுன் நகரில் உள்ள சொகுசு வீடுகள் விற்பனையில் நிபுணத்துவம் கொண்ட சொத்து முகவரான திரு ஹமிஷ் வாக்கர் தெரிவித்தார்.
நியூசிலாந்தின் நிலையான பொருளியலும் வெளிப்படையான சட்டக் கட்டமைப்பும் சிங்கப்பூரர்களை ஈர்ப்பதாக ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ் செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து சொத்து முகவர்கள் கூறினர்.


