தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த ஐந்தாண்டுகள் ஆக வெப்பமானதாக இருக்கும்: ஐநா

2 mins read
1140545a-8cbc-4ea5-a760-bcb4993385f6
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

2023 முதல் 2027 வரையிலான ஐந்து ஆண்டு காலகட்டம் இதுவரை இல்லாத அளவு ஆக வெப்பமானதாக இருக்கும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. கரியமில வாயு வெளியேற்றம், 'எல் நினோ' வானிலை நிகழ்வு காரணமாக வெப்பநிலை உயர்ந்து வருகிறது.

உலகளவில் வெப்பநிலை, பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விரைவில் தாண்டக்கூடும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இது நிகழ மூன்றில் இரண்டு பங்கு சாத்தியம் நிலவுவதாக ஐநாவின் உலக வானிலை ஆய்வு அமைப்பு நேற்று தெரிவித்தது.

இதுவரை ஆக அதிக வெப்பமான எட்டு ஆண்டு காலகட்டம் 2015க்கும் 2022க்கும் இடையேதான் பதிவானது. எனினும், பருவநிலை மாற்றம் வேகம் எடுத்துள்ளதால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என முன்னுரைக்கப்படுகிறது.

"அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது ஓராண்டும் ஐந்து ஆண்டு காலகட்டம் முழுவதும் இதுவரை இல்லாத அளவு ஆக வெப்பமானதாக இருக்க 98 விழுக்காடு சாத்தியம் உள்ளது," என்று வானிலை ஆய்வு அமைப்பு கூறியது.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பதிவான சராசரி வெப்பநிலை, 1850க்கும் 1900க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பதிவான சராசரி வெப்பநிலையைவிட 1.15 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

"வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் எல் நினோ வானிலை நிகழ்வும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பருவநிலை மாற்றமும் சேர்ந்து உலகளவில் வெப்பநிலையை உயர்த்திவிடக்கூடும்," என்று அமைப்பின் தலைவர் பெட்டேரி தாலஸ் குறிப்பிட்டார்.

"உடல்நலம், உணவுப் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, சுற்றுப்புறத்துக்கு இது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் எச்சரித்தார்.

ஜூலை இறுதிக்குள் 'எல் நினோ' ஏற்படுவதற்கான சாத்தியம் 60 விழுக்காடு என்றும் செப்டம்பர் இறுதிக்குள் அது நிகழ்வதற்கான சாத்தியம் 80 விழுக்காடு என்றும் வானிலை ஆய்வு அமைப்பு முன்னதாகக் கூறி இருந்தது.

அலாஸ்கா, தென்னாப்பிரிக்கா, தெற்காசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளைத் தவிர்த்து, 1991 முதல் 2020 பதிவான சராசரி வெப்பநிலையைவிட இவ்வாண்டு வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று அமைப்பு சொன்னது.

குறிப்புச் சொற்கள்