நைஜரில் துப்பாக்கிச்சூடு: 35 பேர் மரணம்

நைஜரில் துப்பாக்கிச்சூடு: 35 பேர் மரணம்

2 mins read
281eebb4-b7ce-4051-82d2-1d3d209753c2
தலைநகர் நியாமேயில் உள்ள டிய்ரி ஹமானி அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியாமே: மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். அங்குள்ள ஆகப்பெரிய விமான நிலையம் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஐந்து மாதங்களுக்குள் இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடிவரும் நைஜரில் இவ்வாண்டு ஜனவரி மாதம், அல்காய்தாவுடன் தொடர்புடைய ஒரு குழு அதே விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

தலைநகர் நியாமேயில் உள்ள டிய்ரி ஹமானி அனைத்துலக விமான நிலையத்தில் வெடிப்புச் சத்தமும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தமும் கேட்டதாகக் குடியிருப்பாளர்கள் கூறினர்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் நைஜரில் காலை தொழுகை முடிந்தபின் அந்தச் சத்தங்களை அவர்கள் கேட்டனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு அருகில் இருந்தோர் வெடிப்புச் சத்தத்தைக் கேட்டனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு அருகில் இருந்தோர் வெடிப்புச் சத்தத்தைக் கேட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களில் 22 பேருடன் 11 வீரர்களும் குடிமக்கள் இருவரும் மாண்டதாக நைஜர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

அல்காய்தாவுடன் தொடர்புடைய ஜமாட் நுஸ்ராட் அல் இஸ்லாம் வால் முஸ்லிமின் என்ற கிளர்ச்சிக் குழு, தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது.

வியாழக்கிழமை (ஜூன் 18) நடந்த தாக்குதலை அடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள், எஞ்சியுள்ள தாக்குதல்காரர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

தாக்குதல் தொடர்பில் 20 பேரையும் அவர்கள் கைதுசெய்தனர்.

ஏவுகணையைப் பாய்ச்சக்கூடிய ஆர்பிஜி-7 ரக ஆயுதம், ஏகே-47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், தகவல்தொடர்புச் சாதனங்கள், ஆயிரக்கணக்கான வெடிமருந்துகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

பாதுகாப்புப் படை வீரர்கள் எஞ்சிய தாக்குதல்காரர்களைத் தேடிவருகின்றனர்.
பாதுகாப்புப் படை வீரர்கள் எஞ்சிய தாக்குதல்காரர்களைத் தேடிவருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் மக்களுடன் மக்களாகக் கலந்துவிட்டதால் அவர்களைக் கண்டுபிடிப்பது சிரமம் என்பதால் பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள அடையாளம் தெரியாதவர்களைத் தாக்க முற்பட்டுள்ளதாகக் குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.

தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி மூடப்பட்டது. அந்தப் பகுதிக்குள் வந்துசெல்லும் அனைத்து வாகனங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகச் சோதனையிடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்