தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியர் உட்பட 15 வெளிநாட்டினருக்கு நைஜீரியாவில் சிறை, அபராதம்

2 mins read
1f32b932-b962-4848-8d7b-96a7e11eabb3
கைதான 15 வெளிநாட்டவர்களில் ஆக அதிகமாக 11 பேர் பிலிப்பீன்சைச் சேர்ந்தவர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

லாகோஸ்: ஆசிய நாடுகளைச் சேர்ந்த 15 பேரை நைஜீரிய நீதிமன்றம் சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளது.

அவர்களில் ஒருவர் மலேசியர்.

அந்த 15 பேர் மீதும் இணையம் வாயிலாக பயங்கரவாதத்தைத் தூண்டியதாகவும் இணைய மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வகைக் குற்றங்களுக்காக ஆக அதிகமான வெளிநாட்டினர் நைஜீரியாவில் கைது செய்யப்பட்ட ஒருசில சம்பவங்களில் இதுவும் ஒன்று என தேசிய லஞ்ச ஒழிப்பு முகவை இந்த விவரங்களைத் தெரிவித்தது.

கைதான 15 வெளிநாட்டவர்களில் ஆக அதிகமாக 11 பேர் பிலிப்பீன்சைச் சேர்ந்தவர்கள்.

சீனாவைச் சேர்ந்த இருவர், மலேசியா மற்றும் இந்தோனீசியாவைச் சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

15 பேரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டுச் சிறை, ஒரு மில்லியன் நைரா (நைஜீரிய நாணயம்) அபராதம் ஆகிய தண்டனைகளை நைஜீரிய நீதிமன்றம் விதித்தது. அபராதத் தொகை 2,681 ரிங்கிட்டுக்குச் சமம்.

நைஜீரிய பொருளியல், நிதிக் குற்ற ஒழிப்பு ஆணையத்தின் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

சிறையில் அடைக்குமுன் குற்றவாளிகள் வசம் இருந்த சாதனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும் நிதிமன்றம் உத்தரவிட்டது.

வெளிநாட்டினர் என்பதை மறைக்க உள்ளூர் மக்களின் அடையாளங்களைத் திருடும் செயலுக்கு நைஜீரிய இளையர்களைப் பயன்படுத்தியதாகவும் 15 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.

நெருக்கமான மக்கள்தொகையைக் கொண்ட ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, இணைய மோசடிகளுக்குப் பெயர்போனது.

இணைய மோசடிகளில் ஈடுபடுவோரை ‘யாஹூ பாய்ஸ்’ என்று உள்ளூர் பேச்சுவழக்கில் அழைப்பது வழக்கம்.

பெரும்பாலும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, ஐரோப்பா ஆகியவற்றைச் சேர்ந்தோரைக் குறிவைத்து நைஜீரியாவில் மோசடிகள் நடைபெறுவதாக தேசிய லஞ்ச ஒழிப்பு முகவை கூறியது.

டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒற்றைத் தேடுதல் நடவடிக்கையில் 792 மோசடிப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 148 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்