பெனின் ஆட்சிக் கவிழ்ப்பைத் தடுத்த நைஜீரியா

2 mins read
2be20824-f610-4e29-b818-a1cea9938b8d
பெனின் நாட்டு ராணுவத்தினர் அங்குள்ள சாலைகளில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

லாகோஸ்: மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின், 14.4 மில்லியன் மக்கள் வாழும் ஒரு நாடு.

அங்கு ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த ஆட்சிக் கவிழ்ப்பைத் தனது ராணுவம் தடுக்க உதவியதாக நைஜீரியா திங்கள்கிழமை (டிசம்பர் 8) தெரிவித்துள்ளது. 

அந்நாட்டுக்குத் தரைப்படைகளையும் போர் விமானங்களையும் அனுப்பியுள்ளதாக நைஜீரிய அதிபர் போலா டினிபு உறுதிப்படுத்தியுள்ளார்.

பத்தாண்டுகளில் முதல் முறையாக எல்லை கடந்து ராணுவத்தை அனுப்பியுள்ளது நைஜீரியா.

பெனின் நாட்டின் அதிபர் பெட்ரிஸ் தலோன், தமது நாட்டில் மூண்டுள்ள கிளர்ச்சியைச் சமாளிக்க நைஜிரியாவின் உதவியை நாடினார்.

அத்துடன்,  அண்டை நாட்டில் ராணுவ ஆட்சி ஏற்பட்டு எல்லைகளில் தீவிர வன்முறைகள் ஏற்படுவதை நைஜீரியா தவிர்க்க விரும்பி இவ்வாறு செய்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கண்காணிப்புப் பணிகளுடன் அதிரடி நடவடிக்கைகள் பெனின் ராணுவத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டதாக நைஜீரியா தெரிவித்துள்ளது. 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளதாரக் கூட்டமைப்பான எகோவாஸ் (ECOWAS) அதன் உறுப்பு நாடுகளின் ராணுவத்தையும் உதவிக்கு அனுப்பவுள்ளதாகவும் அறியப்படுகிறது.

15 நாடுகளை உள்ளடக்கிய அந்த அமைப்பில் இருந்த குறிப்பாக சியார லியோன், ஐவரி கோஸ்ட், கானா ஆகிய நாடுகள் அவற்றின் ராணுவங்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெனின் பகுதிகள் தீவிரவாதத் தாக்குதலுக்கு உட்பட்டு, அதன் ராணுவ வீரர்கள் பலர் உயிரழந்தனர். பெனின் உடனான தனது நீண்ட நெடிய எல்லைப் பகுதிகளில் அரசியல் பதற்றமும் தீவிரவாதமும் மிரட்டுவதை நைஜீரியா விரும்பவில்லை.

கடைசியாக 2017ஆம் ஆண்டில் காம்பிய அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து பதவி விலக மறுத்ததையடுத்து நைஜீரியா அதன் ராணுவத்தை அனுப்பி அமைதியை அங்கு நிலைநாட்டியது. ஆயினும், அண்மையில் மாலி, பெடரகினா ஃபாசோ, நைஜர் ஆகிய நாடுகளில் நடந்த கிளர்ச்சிகளில் நைஜீரியா ராணுவ ரீதியாக அதிகத் தீவிரம் காட்டவில்லை.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு கிளர்ச்சியாளர்கள் அனைவரையும் பெனின் ராணுவம் வெளியேற்றிவிட்டதாகவும் ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற டிக்ரி பஸ்கல் என்பவர் தலைமறைவாகிவிட்டதாகவும் அதிபர் தலோன் தொலைக்காட்சியில் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்