காத்மாண்டு: நேப்பாளத்தில் உள்ள கோர்க்கா மாவட்டத்தின் சும்னபுரி கிராமத்தில் ஒரு வறண்ட நிலச்சரிவு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) நிகழ்ந்தது.
அந்த இடம் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அந்த நிலச்சரிவால் அருகில் இருந்த புதிகண்டகி ஆற்றுநீர் தடைபட்டது. அது பிறகு வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. வெள்ளத்தின் சீற்றத்தால் அதன் பாதையில் இருந்த 40 வீடுகளும் இரு பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
இதுவரையில் காயமடைந்தோர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நேப்பாள அரசாங்கம் ஆற்றின் அருகில் உள்ள கிராமங்களில் வாழும் மக்களை மேடான பகுதிகளுக்கும் பாதுகாப்பான இடங்களுக்கும் சென்றுவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
பேரிடர் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுவிட்டனர். அங்கு நடந்துள்ள சேதங்களைக் கண்டறிய அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
சேற்றை உள்ளடக்கிய வெள்ளநீர் அருகில் உள்ள டாடிங் வட்டாரத்தில் இருந்த நெடுஞ்சாலைப் பாலத்தை உடைத்து, அதனை அடித்துச் சென்றதாக தேசியப் பேரிடர் அபாய கட்டுப்பாட்டு நிர்வாக ஆணையத்தின் தலைவர் டராம் ராஜ் உப்ரிடி தெரிவித்தார்.
நேப்பாள ராணுவத்தினர் ஆறு பேரை மீட்டுள்ளனர். அங்கு இயங்கிய ஓர் நீர்மின்நிலையத்தில் பணிபுரிந்த 18 ஊழியர்கள் அந்த வளாகத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக பிரதமர் பாலேந்திரா ஷா அவரது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
நேப்பாளத்தில் அண்மையில் பனிமலை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் திரிசூலி ஆறும் பாதிக்கப்பட்டது. புத்திகண்டகி அந்த ஆற்றின் துணை நதிகளில் ஒன்றாகும். ஆகஸ்ட் மாதம் நடந்த அந்தப் பேரிடரில் 1,457 பேர் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோரை இதுவரை காணவில்லை.
