தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: ஆளில்லா வீடுகளுக்குள் புகுந்து திருடியதாக ஒன்பது பேர் மீது குற்றச்சாட்டு

2 mins read
61a6bb89-592a-42d5-98a3-9f7e1b63b1d3
லாஸ் ஏஞ்சலிஸ் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றுக்காவலில் ஈடுபடும் காவல்துறையினர். - படம்: ராய்ட்டர்ஸ்

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

இந்நிலையில், மக்கள் பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காட்டுத் தீ அபாயம் அதிகம் இருப்பதால் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட வட்டாரங்களில் கிட்டத்தட்ட 12,000 கட்டடங்கள் அழிந்துவிட்டன.

அங்கு மக்கள் செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்விடங்களில் குடியிருப்பாளர்கள் விட்டுச் சென்ற உடைமைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய காவல்துறையினர் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி இருந்தும் இதுபோன்ற இடங்களில் குடியிருப்பாளர்களின் உடைமைகள் திருடப்பட்டன.

ஆள் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து பொருள்களைத் திருடியதாக ஒன்பது பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் தலைமை அரசாங்க வழக்கறிஞர் நேதன் ஹோச்மன் ஜனவரி 13ஆம் தேதியன்று தெரிவித்தார்.

திருடப்பட்ட பொருள்களில் ‘எமி சிலை’ ஒன்றும் அடங்கும்.

வீடு புகுந்து கொள்ளையடித்தல் சம்பவம் ஒன்றில் 200,000 அமெரிக்க டாலர் (S$273,731) பெறுமானமுள்ள பொருள்கள் திருடப்பட்டன.

குற்றம் சுமத்தப்பட்ட ஒன்பது பேரில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று திரு ஹோச்மன் கூறினார்.

இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இக்குற்றங்கள் நிகழாதிருக்க இந்தக் கடுமையான தண்டனைகள் வகை செய்யும் என்றார் அவர்.

“காட்டுத் தீ காரணமாகப் பலர் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.

“இந்நிலையில், இந்தப் பேரிடரைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சிலர் லாபம் ஈட்ட முற்படுகின்றனர்.

“இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்துகிறோம். இக்குற்றங்களைப் புரிபவர்கள் பிடிபடுவது உறுதி,” என்றார் திரு ஹோச்மன்.

கடந்த ஒரு வாரமாக லாஸ் ஏஞ்சலிஸ் நகரைக் காட்டுத் தீ உலுக்கி வருகிறது.

இதில் குறைந்தது 24 பேர் மாண்டுவிட்டனர்.

ஏறத்தாழ 92,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்