சோல்: தென்கொரியத் தலைநகர் சோலின் நகர மன்றத்திற்கு அருகே ஜூலை 1ஆம் தேதி, நடந்து சென்றவர்களை கார் மோதிய சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் நால்வர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திலேயே ஆறு பேர் மாண்டதாகவும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட மேலும் மூவர் அங்கு உயிரிழந்ததாகவும் தீயணைப்பு வீரர் கிம் சுன்-சூ கூறினார்.
68 வயது கார் ஓட்டுநர், போக்குவரத்து விளக்குச் சமிக்ஞைக்காகக் காத்திருந்த மக்கள் மீது மோதியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
போக்குவரத்துக்கு எதிர்த் திசையில் காரை ஓட்டிய அவர் இரண்டு வாகனங்களை மோதிய பின்னர் நடந்து செல்வோர் மீது மோதியதாகக் கூறப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.


