இந்தியாவில் நிபா கிருமித்தொற்று; விழிப்புநிலையில் மலேசியா, தாய்லாந்து

இந்தியாவில் நிபா கிருமித்தொற்று; விழிப்புநிலையில் மலேசியா, தாய்லாந்து

2 mins read
cb3add97-abee-413a-9b3d-e53ec9df03dc
இந்தியாவில் நிபா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தியின் உண்மைத்தன்மை, அங்குள்ள நிலவரங்கள் ஆகியவற்றை அதிகாரபூர்வ செய்தி ஒளிவழிகள் மூலம் கண்காணித்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெட்டாலிங் ஜெயா: இந்தியாவில் நிபா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருப்பதை அடுத்து, மலேசியாவின் சுகாதார அமைச்சு நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

எல்லை சுகாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து நடப்பில் இருப்பதாக அது உறுதிப்படுத்தியது.

இந்தியாவில் நிபா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தியின் உண்மைத்தன்மை, அங்குள்ள நிலவரங்கள் ஆகியவற்றை அதிகாரபூர்வ செய்தி ஒளிவழிகள் மூலம் கண்காணித்து வருவதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டிருப்பதாக அமைச்சு கூறியது.

“உறுதி செய்யப்பட்ட தகவலைச் சேகரித்து அவற்றை மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்த பிறகே பொதுச் சுகாதார நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். அவை தேசியக் கொள்கைகள், ஏற்கெனவே நடப்பில் உள்ள செயல்முறைகளுக்கு உட்பட்டு இருக்கும்,” என்று அமைச்சு தெரிவித்தது.

மலேசியாவில் உள்ள அனைத்துலக விமான நிலையங்கள், துறைமுகங்கள், நிலம் வழிச் சோதனைச்சாவடிகள் ஆகியவற்றில் உள்ள தயார்நிலை சீரான முறையில் இருப்பதாக அது வலியுறுத்தியது.

மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பயணிகளின் உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பது, தேவையான மருத்துவப் பரிசோதனைகளை நடத்துவது, நிபா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுபவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளைப் பரிந்துரை செய்வது, மருத்துவக் குழுக்கள் தயார்நிலையில் இருப்பது ஆகியவை அடங்கும்.

நிபா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள விலங்குகள், அக்கிருமியால் மாசடைந்த உணவு ஆகியவை மட்டுமல்லாது, நிபா கிருமித்தொற்று ஏற்பட்டோரிடமிருந்தும் மனிதர்களுக்கு கிருமி பரவலாம்.

இதற்கிடையே, இந்தியாவின் கோல்கத்தா நகரிலிருந்து விமானம் மூலம் தாய்லாந்து சென்ற 1,700க்கும் மேற்பட்ட பயணிகளுக்குத் தாய்லாந்து பொதுச் சுகாதார அமைச்சு மருத்துவப் பரிசோதனை நடத்தியது.

இருப்பினும், இதுவரை அவர்களில் யாருக்கும் நிபா கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனைப் பணிகளை முடுக்கிவிட சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்குத் தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் பொதுச் சுகாதார அமைச்சர் ஃபட்டானா ஃபிரோம்ஃபாட் தெரிவித்தார்.

தீவிர மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து அமைச்சுடனும் விமான நிலைய அதிகாரிகளுடனும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக திரு ஃபட்டானா கூறினார்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டால் அந்த நபரை மருத்துவ அறிவியல் துறை தனிமைப்படுத்தலாம் என்றும் எட்டு மணி நேரத்துக்குள் மருத்துவப் பரிசோதனை நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஇந்தியாகிருமித்தொற்று